Published : 08 Nov 2019 09:16 AM
Last Updated : 08 Nov 2019 09:16 AM

ரூ.1.75 கோடி இழப்பீடு வழங்காததால் வேலூரில் 10 அரசு பேருந்துகள் ஜப்தி: நில ஆர்ஜித சார்பு நீதிமன்றம் உத்தரவால் நடவடிக்கை

வேலூர்

ஆம்பூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.1.75 கோடி இழப்பீடு வழங்காததால் வேலூர் பேருந்து நிலையத்தில் 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

ஆம்பூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்காக கடந்த1993-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, கிரிஜம்மாள் (74) என்பவரின் ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக, வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஒரு சதுரடிக்கு ரூ.30 என்று கணக்கிட்டு வழங்கப்பட்டது.

ஆனால், இந்தத் தொகை போதாது என்று கூறி திருப்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் கிரிஜம்மாள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு சதுரடி ரூ.100 வீதம் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், கடந்த 2006-ம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையை கணக்கீடு செய்தது தவறு என்று கூறி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், ஒரு சதுரடி ரூ.43 என்று கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கூறி கடந்த 2012-ம் ஆண்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, கிரிஜம்மாளுக்கு இதுவரை வட்டியுடன் சேர்த்து ரூ.1.75 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், அந்தத் தொகையை வழங்காமல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காலம் கடத்தப்பட்டது. எனவே, ஜப்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்எனக் கோரி வேலூர் மாவட்ட நில ஆர்ஜித சார்பு நீதிமன்றத்தில் கிரிஜம்மாள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதிபக்தவச்சலு, ஆம்பூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் 30 பேருந்துகளை ஜப்தி செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. அந்தப் பேருந்தை ஏலத்தில் விற்பனை செய்ய நீதிபதி நடவடிக்கை எடுத்தார். ஆனால், மீதமுள்ள 29 பேருந்துகளையும் ஜப்தி செய்த பிறகு ஏலத்தில் விற்றால் தங்களுக்கு சேர வேண்டிய பணம் கிடைத்துவிடும் என்று கிரிஜம்மாள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு, நீதிபதி அனுமதி அளித்த நிலையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்பூர் அரசுபோக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சொந்தமான 10 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் வேறு வழியில்லாமல் வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.

இந்த விவகாரத்தில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளதாகவும், அதுவரை ஜப்தி செய்யப்பட்ட 11 பேருந்துகளை ஆம்பூர் பணிமனையில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x