Published : 07 Nov 2019 11:52 AM
Last Updated : 07 Nov 2019 11:52 AM

மாணவர்களுக்கு கைகொடுக்கும் 5 ரூபாய் பஸ்

க.சக்திவேல்

கோவை காந்திபுரத்தில் தனியார் பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. விளையாட்டு போட்டிக்குச் செல்ல குழுவாக வந்த ஒரு பள்ளிமாணவர்கள் 55 பேர் அதில் மொத்தமாக ஏறினர். அங்கிருந்து ஒண்டிபுதூர் செல்ல தலா ரூ.11 கட்டணமாகும். அதன்படி மொத்தமாக அவர்களிடம் ரூ.605-ஐநடத்துநர் கட்டணமாக பெற்றிருக்க வேண்டும். ஆனால், 5 ரூபாய் வீதம்மொத்தம் ரூ.275 மட்டுமே பெற்றுக் கொண்டது, நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடத்துநரிடம் விசாரித்தோம். ‘இந்த பஸ்ல எந்த ஸ்கூல் குழந்தைங்க வந்தாலும் 5 ரூபாய்தான் சார்’ என்றார்.

சமூகத்துக்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செலுத்த நினைக்கும் ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கேற்ப பங்களிப்பைச் செய்கின்றனர். தேடிச் சென்று உதவுபவர்கள் ஒருபுறம்இருக்க, தேடி வரும் பள்ளி மாணவர்களுக்கு உதவி வருகிறது கோவையில் உள்ள விஜய் பஸ் நிறுவனம்.

“உதவி தேவைப்படும் மாணவர்களை கண்டறிந்து உதவுவது எங்களுக்கு கடினம். எனவே, பேருந்தில் சென்றுவர ஆகும் செலவை குறைப்பதே ஒருவகையான உதவிதான் என்று தோன்றியது. எனவேதான், ‘பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 5 ரூபாயில் பேருந்து சேவை’ என்ற திட்டத்தை அறிவித்தோம் என்கிறார் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வி.ஜெகதீஸ் சந்திரன். அவரிடம் பேசினோம், “திட்டத்தை அமல்படுத்தி ஓராண்டாகிவிட்டது. எங்களுக்கு சொந்தமாக ஒண்டிபுதூர்-உடையாம்பாளையம் (S9),
ஒண்டிபுதூர்-மணியகாரன்பாளையம் (S1), ஒண்டிபுதூர்-வடவள்ளி (1C) ஆகிய வழித்தடங்களில் 3 பேருந்துகள் இயங்கிவருகின்றன. பள்ளி சீருடை, அடையாள அட்டையுடன் மாணவர்கள் எங்கு, ஏறி இறங்கினாலும் குறைந்த பட்ச கட்டணமான 5 ரூபாய்மட்டுமே அவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பெற்றோரை இழந்த மாணவர்கள் படிப்பு காலம் முடியும் வரை முற்றிலும் இலவசமாக பயணிக்கலாம். அவர்கள், தங்கள் காப்பாளர் அல்லது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வரிடம் கடிதம் பெற்று வந்தால் போதும்.

திட்டத்தை அமல்படுத்திய தொடக்கத்தில் பேருந்துக்குள் மட்டும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியிருந்தோம். நாளடைவில் வரவேற்பு அதிகரித்து, தற்போது மாணவர்கள் எந்த பேருந்து நிறுத்தத்தில் ஏறினாலும், அவர்களே 5 ரூபாய் மட்டும் அளித்து டிக்கெட் பெற்றுக்கொள்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு அளிப்பதற்கென தனிவண்ணத்தில் 5 ரூபாய் டிக்கெட்டை நடத்துநர்களிடம் அளித்துள்ளோம். இந்த திட்டத்தால் தினந்தோறும் சராசரியாக 100 மாணவர்கள் பயனடைந்து வருவது மனநிறைவை அளிக்கிறது” என்றார் ஜெகதீஸ் சந்திரன்.

பயனடைந்த மாணவி உருக்கம்

பேருந்து சலுகையால் பயனடைந்த மணியகாரன்பாளையத்தைச் சேர்ந்த மாணவி தாரணி கூறும்போது, “எனக்கு அம்மா, அப்பா கிடையாது. சிங்காநல்லூர்ல இருக்கிற காலேஜ்ல படிச்சிட்டு இருந்தேன். தினமும் S1 பஸ்லதான் காலேஜ் போவேன். மணியகாரன்பாளையத்துல இருந்து சிங்காநல்லூர் போயிட்டு, வர்றதுக்கு தினமும் 26 ரூபாய் செலவாகும். வேலைக்கு போயிட்டே படிச்சுட்டு இருந்ததால, பஸ்ஸூக்கு மாசம் 650 ரூபாய் செலவு பண்றது கஷ்டமாஇருந்துச்சு. அந்த நேரத்துல, ‘பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவசம்’னு பஸ்ல நோட்டீஸ் ஒட்டியிருந்தாங்க. அதபார்த்து கேட்டபிறகு, என்னோட படிப்பு முடியும் வரை, கடைசி
ஒரு வருஷம் முழுசா இலவசமா போயிட்டு, வர அனுமதிச்சாங்க. இது, என்னோட படிப்பு செலவ சமாளிக்க ரொம்ப உதவியா இருந்துச்சு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x