Published : 06 Nov 2019 10:41 AM
Last Updated : 06 Nov 2019 10:41 AM

நீட் தேர்வில் ஊழல் மோசடிகள்; ஏழைகளுக்கு எட்டாத மருத்துவக் கல்வி; வைகோ குற்றச்சாட்டு

சென்னை

நீட் தேர்வில் ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (நவ.6) வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. நீட் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது என்பதைத் தொடர்ந்து நாம் கூறி வருகிறோம். அதற்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ள தகவல்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,081 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெறும் 48 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்காக தனிப் பயிற்சி பெறாதவர்கள் மற்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து, தனிப் பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தருமபுரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் 100 விழுக்காடு நீட் தேர்வுக்காக தனிப் பயிற்சி பெற்ற மாணவர்கள்தான் சேர்ந்துள்ளனர். அதேபோன்று சில தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் 98 விழுக்காடு நீட் நுழைவுத் தேர்வு தனிப் பயிற்சி பெற்றவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.

மேலும், 1,040 மாணவர்கள் மட்டுமே முதல் முறையாக நீட் எழுதி, தேர்வு பெற்றுள்ளனர். 2,041 மாணவர்கள் நீட் தேர்வை ஒன்றுக்கு மேற்பட்ட முறை எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து நீட் தேர்வு எழுத தனிப் பயிற்சி பெற முடியாத நிலையில், மருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனி என்ற உண்மையை நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர். இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் விதிமுறைகள் வகுக்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவோ வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

பிளஸ் 2 வகுப்பில் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் பொதுத்தேர்வுக்கும் தயாராக வேண்டும். நீட் நுழைவுத் தேர்வுக்கும் தயாராக வேண்டும். ஆனால், ஏற்கெனவே பிளஸ் 2 வகுப்பு முடித்தவர்கள் நீட் தேர்வுக்கு மட்டும் பயிற்சி பெற்று ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதி மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்து விடுகின்றனர். இது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழகத்தில் ஐந்து மாணவ - மாணவியர் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதி உள்ள முறைகேடுகள் வெளிப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நடைபெறுகின்ற ஊழல்கள், முறைகேடுகளால் தகுதியற்றவர்கள்கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றுவிடும் நிலை உருவாகி இருக்கிறது.

அரியலூர் அனிதா உள்ளிட்ட ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகத்து மாணவிகள் மருத்துவக் கல்வி என்பது கனவாகிப் போனதால் தங்கள் உயிர்களை போக்கிக் கொண்டுள்ளனர். மொத்தத்தில் மருத்துவக் கல்விக்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x