Published : 06 Nov 2019 08:51 AM
Last Updated : 06 Nov 2019 08:51 AM

அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம அங்கீகாரம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை

அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘தாய்மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு' சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கேரள இடது ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன், மார்க்சிஸ்ட் ஆந்திர மாநிலச் செயலாளர் பி.மது, தெலங்கானா மாநிலச் செயலாளர் டி.வீரபத்ரம், கர்நாடக மாநிலச் செயலாளர் யு.பசவராஜ், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மா.ராசேந்திரன், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், பேராசிரியர் அருணன், மார்க்சிஸ்ட் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்டது. இதை அரசியல் சட்டமும் அங்கீகரித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாகப் போற்றப்படுகிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகுமொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நாட்டின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.

பல மொழிகள் பேசும் நாட்டில் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்து, அந்த மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், மொழிவழி மாநிலங்களையும் ஆர்.எஸ்.எஸ். ஏற்கவில்லை. அதனால்தான் 'ஒரே நாடு, ஒரே மொழி' கோட்பாட்டின்படி இந்தியை வலிந்து திணிப்பதுடன், சமூகத்தை சமஸ்கிருத மயமாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்தி மொழி வளர்ச்சிக்கு பல நூறு கோடி ரூபாய்களை வாரி வழங்கும் மத்திய அரசு, இதர மொழிகளின் வளர்ச்சி பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை.

சொந்த விருப்பத்தின் பேரில் யாரும் இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் கற்பது அவரது உரிமையாகும். ஆனால், இதர மொழிகள் பேசுவோர் மீது இந்தியை திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இந்தி திணிப்புக்கு வழி வகுக்கிறது.

அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் நாட்டின் பன்முகத் தன்மை யையும், ஒற்றுமையையும் பாது காக்க முடியும். அனைத்து நிலை கல்வியையும் அந்தந்த மாநில மொழிகளில் கற்கவும், நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகளாக இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

மாநிலங்களில் உள்ள மத்தியஅரசு, பொதுத் துறை நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசால்நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளும் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றம், மத்திய அரசுநிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தாய் மொழியில் பேசவும், அதை அனைத்து மொழிகளில் மொழி பெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x