Published : 06 Nov 2019 08:33 AM
Last Updated : 06 Nov 2019 08:33 AM

‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ நூல் வெளியீடு; பாரம்பரிய இசையை இளம் தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

சென்னை

இந்திய பாரம்பரிய இசை முறைகள் குறித்த பாடங்களை பாதுகாத்து இன்றைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சார்பில் ‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ நூல் வெளியீட்டு விழா, சென்னை அடையாறில் உள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நூலை வெளியிட்டு பேசியதாவது:மிருதங்கம் நமது மதம், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகும். அதிலிருந்து வெளிப்படும் இசையை எந்த மேற்கத்திய இசைக்கருவிகளாலும் ஈடுசெய்ய முடியாது. மிருதங்கத்தின் சிறப்பை விவரிக்கும் இந்நூல், நம் பழங்கால நாகரிகத்துக்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த நூல் நவீன அறிவியலையும், பழங்கால இசையையும் ஒன்றாக இணைத்துள்ளது. மேலும், மிருதங்கம் பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கும், தென்னிந்திய இசையை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லவும் இந்த நூல் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய ஆராய்ச்சிகள் நம் பாரம்பரிய இசைக் கலைஞர்களின் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்வதை உணர்த்துகின்றன. அதனால், இதுதொடர்பான ஆய்வுகளில் அறிஞர்கள் பலர் ஈடுபட்டு நம் பாரம்பரிய கலைகளை முன்னெடுக்க வேண்டும்.

மதங்கள், சாதிகள் உட்பட பல்வேறு இடையூகளை கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடான இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக நம் இசை பாரம்பரியம் இருக்கிறது. எனவே, அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். நம் பழமையான இசை முறைகள் குறித்த பாடங்களை இன்றைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும். அதனுடன் பல்வேறு வேற்றுமைகளை கடந்து நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி, மத்திய தோல் ஆராய்ச்சி மைய இயக்குநர் சந்தோஷ் கபுரியா, ‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ நூல் ஆசிரியர்களான மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலர் டி.ராமசாமி, மிருதங்க கலைஞர் உமையாள்புரம் சிவராமன், பேராசிரியர் எம்.டி.நரேஷ், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x