Published : 06 Nov 2019 07:26 AM
Last Updated : 06 Nov 2019 07:26 AM

வழக்கறிஞர்கள் - போலீஸார் மோதலுக்கான காரணம் என்ன?

ஆர்.சிவா

சென்னை

வழக்கறிஞர்கள் - போலீஸார் இடையே மோதல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்தும் அதை தடுக்கும் வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் பயனுள்ள ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ல் போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கலவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வந்தார்.

அப்போது அவர் மீது ஒரு கும்பல் முட்டை வீசி தாக்குதல் நடத்த, சில வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பதிலுக்கு வழக்கறிஞர்கள் சிலர் சுப்பிரமணியன் சுவாமி மீது புகார் கொடுக்க சென்றபோது போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், 2009 பிப்ரவரி 19-ம் தேதி கலவரமாக மாறியது.

தற்போது இதேபோன்ற சம்பவம் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த 2-ம் தேதியன்று அரங்கேறி உள்ளது. சிறைவாசிகளை அழைத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு வந்த போலீஸ் வாகனத்தின் மீது வழக்கறிஞர் ஒருவரின் வாகனம் மோத, இரு தரப்பினருக்கும் இடையே கலவரமாக மாறிவிட்டது. சென்னையில் நடந்த அதே கலவர காட்சிகள் டெல்லியிலும் நடந்தன. இரண்டு சம்பவத்திலும் நீதிமன்றத்துக்கு வழக்கு நிமித்தமாக வந்த அப்பாவி பொதுமக்களும் கலவரத்தில் பங்கேற்காத வழக்கறிஞர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மோதல் சம்பவத்தைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் சென்னை வழக்கறிஞர்கள் பிப்ரவரி 19-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.

போலீஸ், வழக்கறிஞர்களுக்கிடையே ஏன் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஏன் சாதாரண மோதல் கலவரமாகிறது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவருமான எஸ்.பிரபாகரன் கூறியதாவது: வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்காக ஆஜராகின்றனர். அதேநேரம் போலீஸார் அந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் உள்ளனர். இதில் போலீஸாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் நடந்த கலவரத்தையே இன்னும் யாரும் மறக்கவில்லை. தற்போது டெல்லியில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி கலவரத்துக்கு யார் காரணம் என்பதை ஆராய வேண்டியுள்ளது. போலீஸ் வாகனம் மீது வழக்கறிஞர் ஒருவரின் கார் மோதியது என்றால் அது சாதாரண விசயம். ஆனால் இந்த கலவரத்தில் காயமடைந்த 2 வழக்கறிஞர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நீதித் துறை, வழக்கறிஞர்கள் சங்கம், காவல் துறை இடையே பரஸ்பரம் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள சமரச கமிட்டி அமைக்க வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முடியும். ஏனெனில் வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதித்துறை அமைப்பு செயல்பட முடியாது. அதேபோல சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு போலீஸார் வசம் உள்ளது. இருதரப்பும் முக்கியம் என்பதால் உடனடியாக இதில் யார் செய்தது சரி, யார் செய்தது தவறு எனக் கூறிவிட முடியாது. நடந்த சம்பவத்தை அலசி ஆராய்ந்து நீதித்துறை தான் முடிவு எடுக்க முடியும்.

அதேநேரத்தில் டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட போலீஸார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உடனடி நடவடிக்கை சென்னை சம்பவத்தில் இல்லை. ஆனால் 2 சம்பவங்களிலும் போலீஸார்தான் முதலில் அத்துமீறியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வரும் வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே காவல் நிலையத்திலேயே பிரச்சினை தொடங்கி விடுகிறது. பின்னர் அதே வழக்கு தொடர்பாக நீதிமன்றம் செல்லும் போலீஸாரிடம் வழக்கறிஞர்கள் பிரச்சினை செய்கிறார்கள். வழக்கறிஞர்களின் தொழில் நீதிமன்றத்தில் வாதாடுவதுதான்.

ஆனால், காவல் நிலையத்தில் வந்து தனது தரப்புக்கு ஆதரவாக செயல்படும்படி போலீஸை வற்புறுத்துவார்கள். அதை செய்யாத போலீஸார் மீது கோபப்படுவார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால், சட்டக் கல்லூரிக்கு முறையாக சென்று சட்டம் படித்த வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் வாதாடுவதில் தங்கள் திறமையை காட்டுகிறார்கள். ஆனால், கட்டப்பஞ்சாயத்து பேசி காவல் நிலையத்திலேயே பிரச்சினையை முடித்து கமிஷன் வாங்க நினைக்கும் வழக்கறிஞர்கள்தான் பிரச்சினை செய்வார்கள். நியாயமாக நடக்கும் எந்த வழக்கறிஞருமே பிரச்சினை செய்வது இல்லை. சிலர் மட்டுமே காவல் நிலையத்துக்கே வந்து போலீஸாரை மிரட்டுகின்றனர்.

வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு வந்து வழக்கு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு செல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், எங்கள் வேலையில் குறுக்கிட்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட எங்களை வற்புறுத்தும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது.

வழக்கறிஞர்கள் காவல் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. நீதிமன்றத்தில் மட்டுமே வாதாட வேண்டும் என்று ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் 90 சதவீத பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும். சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் ஈகோ, பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x