Published : 05 Nov 2019 03:41 PM
Last Updated : 05 Nov 2019 03:41 PM

கால்நடைகளுக்கு அதிநவீன வசதிகளுடன் 'அம்மா ஆம்புலன்ஸ்' சேவை: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

'அம்மா ஆம்புலன்ஸ்' வாகனத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை

கால்நடைகளுக்கு குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்ட 'அம்மா ஆம்புலன்ஸ்' வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (நவ.5) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜெயலலிதா 2016-ம் ஆண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் பரீட்சார்த்த முறையில் காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு தலா 2 ஊர்திகள் வீதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாயிகளிடையே இச்சேவை நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதால் இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்ட 22 கால்நடை அவசர மருத்துவ ஊர்தியான 'அம்மா ஆம்புலன்ஸ்' வாகனங்களின் சேவையைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் பழனிசாமி இன்று 7 ஓட்டுநர்களுக்கு சாவிகளை வழங்கினார்.

இந்த அம்மா ஆம்புலன்ஸ் வாகனத்தில், கால்நடைகளின் நோய்த் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசியக் கருவிகள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

வாகனம் செல்ல இயலாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊர்திக்கு எடுத்து வருவதற்கு ஏதுவாக அகற்றி பொருத்தக்கூடிய தள்ளுவண்டி வசதி செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிட ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடையையும் தாங்கக்கூடிய வகையில் சக்திவாய்ந்த ஹைட்ராலிக் தூக்கி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் இணைப்பு தங்கு தடையின்றி கிடைத்திட இன்வர்டர் மற்றும் இரவில் மின்சார வசதியில்லாத இடத்தில் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வாகனத்தின் வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய பெரிய ஒளிவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி கால்நடை பராமரிப்பு துறைப்பணிகள் மற்றும் திட்டங்கள் பற்றி விரிவாக கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொலைக்காட்சி ஒன்று வாகனத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தின் பக்கவாட்டு வெளிப்புறத்தில் துறைப்பணிகளை விளக்கும் ஒளிரும் மின்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் 'அம்மா ஆம்புலன்ஸ்' அவசர சிகிச்சை ஊர்தி இயக்கப்படும். இந்த சேவை '1962' என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x