Published : 04 Nov 2019 10:02 PM
Last Updated : 04 Nov 2019 10:02 PM

திருவள்ளூரில் சோகம்; செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் கிணற்றில் தவறி விழுந்த காதலர்கள்: காதலி உயிரிழப்பு 

திருவள்ளூர்

திருவள்ளூர் மிட்டனமல்லி அருகே திருமணம் நிச்சயம் ஆன காதல் ஜோடி செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் 400 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்ததில் காதலி உயிரிழந்தார். காதலன் மீட்கப்பட்டார்.

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெர்சி ஸ்டெஃபி (19). சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபலமான குழுமத்தில் பணியாற்றி வந்தார். பட்டாபிராம் நவஜீவன் நகரில் வசிப்பவர் அப்பு (24). இவர்கள் இருவரும் நட்பாகப் பழகி நாளடைவில் காதலர்களாகியுள்ளனர்.

ஒருகட்டத்தில் இவர்கள் காதல் பெற்றோருக்குத் தெரியவர அவர்கள் இருவரின் காதலையும் ஏற்றுக்கொண்டனர். நல்லதொரு நாளில் நிச்சயதார்த்தமும் நடந்தது. காதலர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தனர்.

நேற்று அப்புவும் மெர்சியும் வெளியில் செல்ல முடிவெடுத்தனர். வேலைக்குக் கிளம்புவதாக வீட்டில் சொல்லிவிட்டு, தனது நிறுவனத்தில் விடுமுறை சொல்லிவிட்டு காதலனுடன் கிளம்பினார் மெர்சி. இருவரும் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம் செங்குன்றம் 400 அடி சாலையில் சென்றனர். அப்போது வழியில் வயலும் அதையொட்டி பம்பு செட்டும் அதில் நீர் பொங்கிச் செல்வதையும் பார்த்துள்ளனர்.

ரம்மியமான அந்த இடத்தில் சென்று அமர்ந்து பேசலாம் என முடிவெடுத்துள்ளனர். பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வயல் வெளியில் பம்பு செட் அமைந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். அது சடகோபன் என்பவருக்குச் சொந்தமான பம்பு செட். அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் பம்பு செட்டில் அமர்ந்து பேசியுள்ளனர்.

இருவரும் அந்த இடத்தில் போட்டோ எடுக்கலாம எனத் தீர்மானித்துள்ளனர். பின்னர் ஒன்றாக செல்ஃபி எடுக்கத் தீர்மானித்து செல்ஃபி எடுத்துள்ளனர். பின்னர் கிணற்றின் சுவர் மீது ஒன்றாக அமர்ந்து செல்ஃபி எடுத்துள்ளனர். செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படாத அவர்கள் அஜாக்கிரதையாக செல்ஃபி எடுக்க, மெர்சி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரைப் பிடிக்க முயன்ற காதலன் அப்புவும் உள்ளே விழுந்துள்ளார்.

ஆழமான கிணறு என்பதால் இருவரும் மூழ்கியுள்ளனர். மெர்சி மற்றும் அப்பு இருவரும் உயிருக்குப் போராடிய நிலையில் உதவி கேட்டு அப்பு கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள், உரிமையாளர் சடகோபன் ஆகியோர் ஓடிவந்து பார்த்துள்ளனர். பின்னர் சைக்கிள் டியூப் மூலம் இருவரையும் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அதற்குள் மெர்சி மூழ்கிவிட்டார். அப்புவை மட்டும் காப்பாற்ற முடிந்தது. சடகோபன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி மெர்சியின் உயிரற்ற உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்தா புதுப்பேட்டை போலீஸார், மெர்சியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடந்த சம்பவம் குறித்து ஆவடி, முத்தா புதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை இருவீட்டாரும் ஏற்று மணம் முடிக்க சம்மதித்த நிலையில் உலகின் அத்தனை சந்தோஷமும் தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக உணர்ந்த ஜோடி, செல்ஃபி மோகத்தால் ஆபத்தை உணராது கிணற்றில் தவறி விழுந்ததில் மெர்சி உயிரிழந்தது இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x