Published : 04 Nov 2019 08:36 PM
Last Updated : 04 Nov 2019 08:36 PM

வாங்கிய 1000 ரூபாய் எங்கே?- விவசாயி கேள்வி : ஆட்சியர் முன் வசமாக சிக்கி பணத்தைத் திருப்பித் தந்த அலுவலர் 

படம்: மனு மற்றும் அரசு அலுவலர் திருப்பித்தந்த ரூ. ஆயிரத்துடன் தங்கராஜ்.

ராமநாதபுரம்

முதியோர் உதவித்தொகை பெற்றுத் தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அலுவலர் வேலையை முடிக்காமல் இருந்ததால் ஆட்சியரிடம் முதியவர் புகார் அளித்தார். தவறை ஒப்புக்கொண்டு பணத்தைத் திருப்பிக்கொடுத்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் அருகே உள்ள மாடக்கொட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (61). விவசாயக் கூலியான இவர், முதியோர் உதவித்தொகை கேட்டு கடந்த ஆண்டு ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதற்காக சமூக பாதுகாப்புத் திட்ட உதவியாளர் மாரி என்பவரிடம் ஓராண்டுக்கு முன்பு ரூ.1000 லஞ்சம் கொடுத்துள்ளார்.

ஆனால், வாங்கிய பணத்திற்கு ஒப்புக்கொண்டபடி வேலையை முடிக்காமல் அலுவலர் இழுத்தடித்துள்ளார். முதியோர் உதவித்தொகை வாங்கித் தரவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயி தங்கராஜ் 3 முறை ஆட்சியரிடம் மனு அளித்தார்.

நேற்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதிலும் தங்கராஜ் நியாயம் கேட்டு மனு அளித்தார். மனுவைப் படித்த ஆட்சியர் வீரராகவ ராவ், வட்டாட்சியர் அலுவலக அலுவலர் மாரியை குறை தீர்க்கும் கூட்டத்திற்கு அழைத்து விசாரணை செய்தார். அப்போது பணம் பெற்றதை அலுவலர் மாரி ஒப்புக்கொண்டார்.

வாங்கிய பணத்தைத் திருப்பித் தர ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அலுவலர் மாரி தான் லஞ்சமாக வாங்கிய ரூ.1000-ஐ ஆட்சியர் முன்னிலையில் திருப்பிக் கொடுத்தார். அரசு நலத்திட்டங்களைப் பெற பணம் பெறுவதும், பணம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என இருவருக்கும் அறிவுரை சொல்லி ஆட்சியர் எச்சரித்து அனுப்பினார்.

அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்களிடமிருந்து பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துத் துறை அலுவலர்களையும் ஆட்சியர் எச்சரித்தார். ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்தாலும் நலத்திட்டத்தைச் செயல்படுத்த மனுதாரரிடமிருந்து லஞ்சம் பெற்றதற்காக அலுவலர் மாரி மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

குறைதீர் கூட்டத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. அலுவலர்கள் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x