Published : 04 Nov 2019 11:00 AM
Last Updated : 04 Nov 2019 11:00 AM

மாஞ்சா நூல் கழுத்தறுத்து 3 வயது குழந்தை உயிரிழப்பு: 4 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை

சென்னை

சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 10-ம் வகுப்பு மாணவன் உட்பட 4 பேரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்பகுளத் தெருவில் வசிப்பவர் கோபால் (35). இவர் மனைவி சுமித்ரா (28). இவர்களது ஒரே மகன் அபிநவ் ஷராப் (3). நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோபால், தனது மனைவி மற்றும் மகன் அபிநவ் ஷராப்புடன் தனது இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மாலை தனது வீட்டுக்கு மகனுடன் திரும்பினார். 3 வயது குழந்தை என்பதால் முன்பக்கம் பாதுகாப்பாக அமர்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகர் பாலத்தின் மேல் தனது இருசக்கர வாகனத்தில் கோபால் வந்துகொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பட்டம் அறுந்து வந்த மாஞ்சா நூல் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த அபிநவ் ஷராப்பின் கழுத்தை அறுத்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தை கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் அபிநவ் கீழே விழுந்தார். இதனால் பதற்றமடைந்த கோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பார்த்தபோதுதான் குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தெரிந்தது.

ரத்த வெள்ளத்தில் மயக்கமான குழந்தை அபிநவ் ஷராப்பை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபிநவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 4 பேரை ஆர்.கே.நகர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொருக்குப்பேட்டை காமராஜர் நகரில் வசிக்கும் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர், கொருக்குப்பேட்டை சாஸ்திரி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், தண்டையார்பேட்டை, நேரு நகரில் வசிக்கும் தனியார் வங்கியின் கலக்‌ஷன் ஏஜெண்ட் , தண்டையார்பேட்டை குமரன் நகரில் வசிக்கும் 65 வயது முதியவர் ஆகிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கும் குழந்தை அபிநவ் உயிரிழப்புக்குக் காரணமான மாஞ்சா நூல் விவகாரத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருத்தல் ஐபிசி பிரிவு 304(1) பிரிவு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே காசிமேட்டில் பட்டம் விற்பனை செய்த சார்லஸ் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x