Published : 03 Nov 2019 03:50 PM
Last Updated : 03 Nov 2019 03:50 PM

பெரியாருக்கும், அண்ணாவிற்கும் இருக்கக்கூடிய வேற்றுமை: திருமணவிழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை
"போக்குவரத்து காவல்துறை சார்பில் அபராதம் விதித்து வழங்கப்படும் இரசீதில் தமிழ் இடம்பெறவில்லை என்றால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், விராச்சிலை சுப. காசி விஸ்வநாதன் மற்றும் வெண்ணாவல்குடி அரு. வடிவேல் ஆகியோரது இல்லத் திருமண விழாக்களில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:

இந்த திருமணம், தந்தை பெரியார் கண்ட கனவு! அறிஞர் அண்ணா எண்ணிய எண்ணம்! கலைஞர் காட்டியிருக்கும் வழி! அந்த அடிப்படையில், இது ஒரு சீர்திருத்தத் திருமணமாக - சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.

இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளில், நான் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகின்ற நேரத்தில், வரலாற்றில் பதிவாகி இருக்கக்கூடிய ஒரு செய்தியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அதை இந்த மணவிழாவிலும் வழிமொழிவது என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.

இன்றைக்கு நாட்டில், ஒரு புறத்தில் வைதீகத் திருமணங்கள் நடக்கின்றன. மற்றொரு புறத்தில், சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வைதீகத் திருமணத்தைக் குறை சொல்ல வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் நமக்கு இருந்ததில்லை. ஆனால் அதே நேரத்தில், நாம் சுயமரியாதை பெற்றவர்களாக இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். அதற்காக தொடர்ந்து உழைத்தார்கள். பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அதற்காக கல்லடி - சொல்லடி அனைத்தையும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்பட்டதில்லை.

தான் எண்ணியதை அப்படியே பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லக்கூடியவர். அப்படி எடுத்துச் சொல்லக் கூடிய நேரத்தில் மற்றவர்களுடைய மனம் புண்படுமா? என்று கூட தந்தை பெரியார் யோசிக்க மாட்டார். அதை அப்படியே எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் தந்தை பெரியார் ஒருவருக்குதான் உண்டு.

ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியார் என்ன கருத்தைச் சொல்கிறாரோ - எந்தக் கொள்கையை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறாரோ அதிலிருந்து கிஞ்சித்தும் பின்வாங்கி விடாமல் மக்கள் கோபப்படாத வகையில், ஒரு பழமொழி சொல்வதுண்டு ; ‘வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல்’ என்று - அதுபோல மக்கள் எப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அறிந்து - புரிந்து அதற்கேற்ற வகையில் எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் நம்முடைய அறிஞர் அண்ணாவுக்கு உண்டு.

இதற்கு நான் ஒரு உதாரணத்தை உங்களிடத்தில் எடுத்துச் சொல்லவேண்டும். அது என்னவென்றால், தந்தை பெரியார் காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இடையில் ஒரு வார்த்தையைக் கூறுகிறார். வழக்கமாகச் சொல்லக்கூடிய வார்த்தை தான். கடவுளை "கல்" என்று சொல்கிறார்.

கடவுளை "கல்" என்று சொன்னவுடன், எதிரில் அமர்ந்திருக்கக் கூடிய சில பக்தப் பெருமக்கள் ஆத்திரத்துடன் எழுந்துநின்று, தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து, “நீங்கள் கடவுளை கல் என்று சொல்லக்கூடாது. அதைத் திரும்பப்பெற வேண்டும்” என்று கூச்சல் போட்டார்கள். உடனே தந்தை பெரியார் சொன்னார்,

“நான் சொன்ன சொல்லில் இருந்து என்றைக்கும் பின்வாங்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அதனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத குறிப்பிட்ட சில பக்தப் பெருமக்கள் கீழே கிடந்த கல்லை எடுத்து தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி வீசினார்கள்.

அங்கிருந்த விளக்குகள், மைக்குகள் உடைக்கப்படுகின்றன. அதன் பிறகு தந்தை பெரியார் பேசுகிறார். தந்தை பெரியார் மீதும் அந்த கல்பட்டு நெற்றியில் ரத்தம் கொட்டுகிறது. அதன் பிறகு தந்தை பெரியார் அவர்களால் பேச முடியாமல், பாதியிலேயே அந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்டு போய்விட்டார்.

இந்தச் செய்தி காஞ்சிபுரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணாவிற்கு கிடைத்தது. உடனடியாக அறிஞர் அண்ணா அதே காஞ்சிபுரத்தில் தந்தை பெரியார் பேசிய அதே வீதியில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார். தந்தை பெரியார் பேசிய அதே மேடையில் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்துகொண்டு கூட்டத்தில் பேசினார். பேசுகிறபோது, “இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஆகவே இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் தந்தை பெரியார் என்ன உணர்வுடன் சொன்னாரோ, அதே உணர்வுடன் அதை எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த மேடையில் நான் ஒரு நாடகத்தை நடத்தப் போகிறேன்” என்று சொல்லி, அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினார்கள்.

அந்த நாடகத்தில் ஒரு காட்சி, சிஷ்யனை எதிர்நோக்கி பூசாரி உட்கார்ந்திருக்கிறார். அறிஞர்அண்ணா சிஷ்யனாக வேடம் ஏற்கிறார்.

பூசாரி நின்று கொண்டிருக்கிறபோது, அந்த சிஷ்யன் உள்ளே வருகிறான்.சிஷ்யனைப் பார்த்த பூசாரி கேட்டார், “சிஷ்யா, மூன்று நாள்களாக நீ என்னை வந்து பார்க்கவில்லை. எங்கே போயிருந்தாய்?” என்று கேட்கிறார். உடனே அந்த சிஷ்யன் சொல்கிறான், “பூசாரி, தில்லையில் இருக்கக்கூடிய என்னுடைய எம்பெருமானை தரிசிக்கப் போயிருந்தேன்” என்று சொல்லுகிறான்.

உடனே பூசாரி சொல்லுகிறார், “சிஷ்யா, நீ எம்பெருமானை தரிசிக்க போனபொழுது, உன்னுடைய எம்பெருமான் உனக்கு தரிசனம் தந்தாரா?” என்று கேட்கிறார்.தந்தார் என்று சிஷ்யன் பதில் சொல்கிறான்.

உடனே பூசாரி, எப்படி தந்தார்? எந்த ரூபத்திலே உனக்கு காட்சி தந்தார் என்று கேட்கிறார்.உடனே சிஷ்யன் சொல்கிறான், என்னுடைய எம்பெருமான் தில்லையில் இருக்கக்கூடிய நடராஜ பெருமான் அவர்கள், ஒரு காலைத் தூக்கி வைத்துக்கொண்டு காட்சி தந்தார்.

அப்படியா? மகிழ்ச்சி! என்று சொல்லிவிட்டு, அதுபோல், உன்னால் காட்சி தர முடியுமா? என்று பூசாரியைப் பார்த்து கேட்டபொழுது, அந்த சிஷ்யன் காலைத் தூக்கி வைத்துக்கொண்டு காட்சி தருகிறான்.

ஒரு நிமிடம் நிற்கிறான். இரண்டாவது நிமிடம் நிற்க முடியவில்லை. காலை கீழே போட்டு விடுகிறான். உடனே பூசாரி, சிஷ்யனைப் பார்த்து கேட்கிறார், “ஏனப்பா, காலை கீழே போட்டுவிட்டாய், சிதம்பரத்திற்குச் சென்ற உன்னுடைய எம்பெருமான் நடராஜப் பெருமாள் இரண்டு நிமிடம்தான் காலை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாரா? பிறகு காலை கீழே போட்டாரா?” என்று கேட்கிறார்.

“இல்லை, இல்லை, அவர் காலை கீழே போடவில்லை. நான் போட்டுவிட்டேன்” என்று சொல்கிறான்.“ஏன் போட்டாய்?” என்று கேட்கிறார் பூசாரி.

“அது கல் நிற்கும்; நான் மனிதன் நிற்க முடியாது” என்று சிஷ்யன் சொல்கிறான்.

இப்படித்தான், நீங்கள் எல்லாம் கைதட்டினீர்கள் அல்லவா! அதுபோன்றுதான் கல்லெறிந்த கைகள் எல்லாம் அண்ணா இந்தக் கருத்தை எடுத்துச் சொன்னபொழுது, கரவொலி எழுப்பினார்கள்.

இதுதான், தந்தை பெரியாருக்கும், அண்ணாவிற்கும் இருக்கக்கூடிய வேற்றுமை. வேற்றுமையிலும் ஒற்றுமைதான். ஆக, ஒரே கொள்கைதான்; ஒரே லட்சியம்தான்; ஒரே உணர்வுதான்.

அதைத்தான் நம்முடைய அறிஞர் அண்ணா தந்தை பெரியார் வழி நின்று, அதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்து புரிந்து, அதற்கேற்ற வகையில் கருத்துகளை எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் அண்ணாவிற்கு இருந்தது.

ஆக, அண்ணாவையும், பெரியாரையும் ஒருமித்த ஒரே தலைவராக நம்முடைய தலைவர் கலைஞர் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

இங்கே உரையாற்றியபொழுது சொன்னார்கள், அண்ணா இல்லை, தந்தை பெரியார் இல்லை, கலைஞர் இல்லை என்று. மன்னிக்கவும், எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கின்ற காரணத்தினால்தான், இந்த நாடு இன்றைக்கு தன்மானத்தோடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் இருக்கிறார்கள், இன்றைக்கும் நம்முடைய உயிரோடு, உதிரத்தோடு கலந்திருக்கக்கூடிய தலைவர்களாகத்தான் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, அந்த உணர்வு இருக்கின்ற வரையில், இந்தத் தமிழ்நாட்டில் எந்தக் கொம்பனாலும் உள்ளே நுழைந்துவிட முடியாது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இது அரசியல். அரசியல் பிரச்சினையைப்பற்றி திருமண விழாவில் பேசலாமா? என்றுகூட நீங்கள் கேட்கலாம். இது தி.முக. மேடை; நம்முடைய குடும்ப மேடை. பேசினால் தவறு இல்லை.
ஏதோ அண்மையில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்கலாம். எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது தொகுதி மக்களுக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் புரியும். நாம் அதைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் களத்தில் நின்று, 39 இடங்களில் வெற்றி பெற்ற ஒரு கட்சிதான், திமுக தலைமையில் அமைந்த கூட்டணி என்பது எல்லோருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

வெண்ணாவல்குடி அரு. வடிவேல் இல்லத் திருமண விழாவில் ஆற்றிய உரை:

இன்றைக்கு ஒரு செய்தியைப் பார்த்தேன். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வாகன அபராதச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதில் ஆங்கிலம் இருக்கிறது, இந்தி இருக்கிறது, ஆனால் தமிழ் இல்லை. அதனால்தான் சொல்கிறோம்; இங்கே நடப்பது, எடுபிடி ஆட்சி என்று.

போக்குவரத்து காவல்துறை சார்பில் அபராதம் விதித்துக் கொடுக்கப்படக்கூடிய ரசீதில் கண்டிப்பாகத் தமிழ் இடம்பெற வேண்டும். அந்த ரசீதில் தமிழ் இடம்பெறவில்லை என்று சொன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும், அந்தப் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று இந்தத் திருமண விழாவின் மூலம் நான் தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

--

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x