Published : 16 Jul 2015 14:19 pm

Updated : 16 Jul 2015 14:19 pm

 

Published : 16 Jul 2015 02:19 PM
Last Updated : 16 Jul 2015 02:19 PM

நிலச் சட்டத்தில் ஜெ. எதிர்ப்பு நாடகம்: ராமதாஸ் கருத்து

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவுகளை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள நிலையில், இது தேர்தல் ஆதாயத்துக்கானதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்கள் உழவர்களுக்கு எதிரானவை என்றும், அவை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


அவரது இந்த திடீர் மனமாற்றத்தின் பின்னணியில் அரசியல் இருந்தாலும் அது வரவேற்கத்தக்கது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில்,கடிதம் வடிவில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் உரையில் தான் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இதற்காக ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம் தான் நம்பும்படியில்லை. நிலச் சட்டத்தில் செய்யப்படவுள்ள திருத்தங்களுக்கு தமிழகத்திலுள்ள உழவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களின் உணர்வுகளை மதித்து தமது அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனெனில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் தேசப் பாதுகாப்பு, ராணுவம், ஊரக கட்டமைப்பு வசதிகள், சமூகக் கட்டமைப்புகள், தொழில் தாழ்வாரங்கள் ஆகிய 5 தேவைகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்; நிலங்களை கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்; பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மோடி அரசு இந்த பிரிவுகள் அனைத்தையும் நீக்கியிருக்கிறது.

இந்த நடவடிக்கை உழவர்களை கடுமையாக பாதிக்கும் என்று தொடக்கத்திலேயே எதிர்த்ததுடன், போராட்டமும் நடத்தினேன். மற்ற கட்சிகளும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தன. உழவர் அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தின.

ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்த ஜெயலலிதா மட்டும் இச்சட்டத்தை ஆதரித்ததுடன், கடந்த மார்ச் 10 ஆம் தேதி மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்கும்படி அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

அதன்பிறகும் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பேரவைக்கு வெளியே ஜெயலலிதாவும் இச்சட்டத்தை தீவிரமாக ஆதரித்தனர்.

இது குறித்து கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ நிலம் எடுத்தல் சட்டத்திருத்த மசோதா 5 வகைத் திட்டங்களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

மாநில அரசு தேவை என்று கருதினால் ஒவ்வொரு திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, பொதுநலனுக்கு ஏற்ப விலக்களிக்க முடியும். மாநிலத்திற்கு அதிக அதிகாரம் அளிக்கும் முடிவை எதற்காக எதிர்க்க வேண்டும்’’ என்று கூறினார். ஆனால், இப்போது திடீரென தமது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சினையின் தொடக்கக் கட்டத்தில் உழவர்களும், எதிர்க்கட்சிகளும் எழுப்பிய எதிர்ப்புக் குரலை புரிந்து கொள்ள முடியாத ஜெயலலிதாவுக்கு, இப்போது உழவர்களின் குரல் புரிந்திருப்பது விந்தையாக உள்ளது.

தமக்கு காரியம் ஆக வேண்டுமானால் எத்தகைய நாடகத்தையும் அரங்கேற்ற ஜெயலலிதா தயங்க மாட்டார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தால், மக்கள் தம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே இப்படி ஒரு நிலைப்பாட்டை ஜெயலலிதா எடுத்திருக்கிறார்.

ஒருவேளை தமிழக விவசாயிகளின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாக அக்கறை இருந்தால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எதிர்க்கும்; சட்டத்திருத்த முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தேவைகளுக்காக தமிழகத்தில் ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படாது என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் விலை உட்பட உழவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயலலிதா திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதா நாடகமாடுவதாகவே அனைவரும் கருத வேண்டியிருக்கும்"

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


நிலச் சட்டம்முதல்வர் ஜெயலலிதாராமதாஸ்விவசாயிகள் நலன்தேர்தல் ஆதாயம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x