Published : 29 Oct 2019 04:52 PM
Last Updated : 29 Oct 2019 04:52 PM

அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்ப் பலி வேண்டுமா? - ஆழ்துளைக் கிணறு அரசு விதி குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

சுஜித் உயிரிழப்பு விவகாரத்தில் நேரலை செய்ததைத்தவிர ஊடகங்கள் வேறு சமூகப் பொறுப்புடன் செயல்படவில்லை, சமூக அக்கறையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல், அதைத்தொடர்ந்து பொதுநலவழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற அளித்த வழிகாட்டுதல் காரணமாகத் தமிழக அரசு பஞ்சாயத்துச் சட்டம் மூலம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சட்டமாக இயற்றியது.

ஆனாலும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடாதது குறித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் பல உயிரிழப்புகள் நேர்ந்தது.

கடைசியாகக் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் சுஜித் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணி நேர மீட்புப்பணியின் முயற்சி கைகூடாமல் பிணமாக மீட்கப்பட்டார். சிறுவன் இழப்பு, ஆழ்துளைக் கிணறு குறித்த சட்டத்தைக் கடுமையாக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன் ராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அவரது கோரிக்கை மனுவில் “ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும், உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கிய அடிப்படையில் தமிழக அரசின் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடவேண்டும்” எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றம் விடுமுறையில் உள்ள நிலையில் அவசர வழக்காக நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் நீதிபதிகள் அமர்வு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்ப் பலி வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தொடர் நேரலை செய்ததைத் தவிர எந்த ஊடகங்களும் சமூகப் பொறுப்புடன் செயல்படவில்லை. மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயல வேண்டும். விழிப்புணர்வு கொண்டுவர ஊடகங்கள் தான் அதிக பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் சமூகப் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தினர்.

அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. ஆழ்துளைக் கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா ?

இதுவரை எத்தனை ஆழ்துளைக் கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளின் எண்ணிக்கை என்ன? விதிகளை மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து நவம்பர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x