Published : 28 Oct 2019 03:15 PM
Last Updated : 28 Oct 2019 03:15 PM

மதுரை மாவட்டத்தில் பட்டாசு தீ விபத்துகள் குறைவு: மு.க.அழகிரி வீடு அருகே ‘ராக்கெட்’ பட்டாசால் தென்னை மரம் சாம்பல்

மதுரை

கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் மதுரை மாவட்டத்தில் பட்டாசு விபத்துகள் குறைந்தன. உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வீடு அருகே நடந்த பட்டாசு விபத்தில் ஒரு தென்னை மரம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். மதுரை மாவட்டத்தில் மக்கள் தீபாவளியைக் கொண்டாட வீடுகளில் முடங்கியதால் வாகனப் போக்குவரத்து அனைத்து பஸ் நிலைங்களும் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தில் பட்டாசு தீ விபத்துகள், உயிரிழப்புகளைத் தடுக்கவும் தீயணைப்புத் துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்ககைளை எடுத்து இருந்தனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் பட்டாசு தீ விபத்துகளில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேகமாக தனி தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், கடந்த 2 நாளாக 4 மருத்துவர்கள், 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் குழு ஷிஃப்ட் அடிப்படையில் பணிபுரிந்தனர்.

அதுபோல், தீயணைப்புத் துறையினரும் மாவட்டத்தில் எங்கேனும் தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை அணைக்கவும், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கவும் தனி மீட்புக்குழுக்கள், கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணித்தனர்.

தீபாவளிப் பண்டிகையை நேற்றும், முந்தைய நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அதனால், மதுரை மாவட்டம் முழுவதுமே கடந்த நாளாக பகல், இரவில் திரும்பிய பக்கமெல்லாம் பட்டாசு சத்தம்தான் காணப்பட்டது. இரவு வெடிச்சத்தத்தால் அதில் மின்னிய ஒளியால் இரவே பகலானது.

இந்த முறை பொதுமக்களையும், குழந்தைகளையும் கவரும் வகையில் பட்டாசு வெடிகளில் புதுப்புது ரகங்களை அறிமுகம் செய்திருந்தனர். அதை வெடிக்கத் தெரியாமல் சிறுசிறு விபத்துகள் நடந்தன. பெரியளவில் விபத்துகள் நடக்கவில்லை.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் பட்டாசு தீ விபத்துகள் குறைந்தன.

இது குறித்து மாவட்ட தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் எஸ்.கல்யாணகுமார் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளில் மட்டும் மொத்தமே 28 விபத்துகளே நடந்தது. இதில், தீபாவளி பட்டாசு விபத்து 5 மட்டுமே நடந்தன.

நேற்று தீபாவளி நாளில் 2 இடங்களில் பட்டாசு தீ விபத்து நடந்தது. இந்த பட்டாசு தீவிபத்துகள் அனைத்தும் ராக்கெட் பட்டாசால் ஏற்பட்டவை.

ஓரிடத்தில் வீடு கட்டுவதற்காக ஷெட் போட்டிருந்தனர். அதில் ராக்கெட் பட்டாசு பட்டு கூரை ஷெட் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.

மற்றொரு விபத்து டிவிஎஸ் நகரில் நடந்தது. அப்பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டு அருகே ராக்கெட் பட்டாசு போய் விழுந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

தீ விபத்துகள் குறைந்ததற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு, ஒரு காரணம். தீயணைப்புதுறை கடந்த சில வாரமாக பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீபாவளி பட்டாசு விபத்துகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல், எப்படி பட்டாசு வெடிக்க வேண்டும் போன்ற செயல்முறைகள் செய்து காட்டப்பட்டன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x