Published : 27 Oct 2019 10:02 AM
Last Updated : 27 Oct 2019 10:02 AM

தீபாவளி திருநாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தீபாவளி என்பது மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் நிறைந்த தீப ஒளித் திருநாளாகும். அத்தகைய மங்களகரமான திருநாளில், தமிழக மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளித் திருநாள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வளமையையும் கொண்டு வந்து ஒவ்வொருவரின் வாழ்விலும் நிலை பெற்றிருக்க வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: தீப ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், எனதுஇதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்துக்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளித் திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது. தீபாவளிப் பண்டி கையன்று மக்கள் அதிகாலை எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடை அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி, உற்றார், உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டு, உற்சாகத்துடனும், குதூகலத்து டனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், வளங்களும் பெருகட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப் பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்: தீபத் திரு நாளாம் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், மக்கள் அனைவருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த தீபத் திருநாளில் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிஇறைவனின் அருள் கிடைக்கட்டும்.

இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ மனதார வாழ்த்தி, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:தமிழக, தெலங்கானா மற்றும் அனைத்து இந்திய சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளித் திருநாளில் அனைவரும் அனைத்து செல்வமும், ஆரோக்கியமும், நலமும் பெற்று வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

எப்படி அகல் விளக்குகள் இருளை விலக்கி ஒளியைத் தருகின்றதோ அதேபோல அனைவரது வாழ்வும் ஒளிமயமாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க இந்த தீபாவளியில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மகிழ்ச்சித் திருநாளான தீபாவளிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகங்காரமும், ஆணவமும் அழிந்து ஆனந்தமும், அமைதியும் மக்களிடம் தழைக்க வேண்டும் என்பதுதான் தீப ஒளித் திருநாளின் அடிப்படைத் தத்துவமாகும்.

‘அதர்மம் எப்போதும் நிலைத்ததில்லை’ என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்நன்னாளில், தீமைகள் அனைத்தும் விலகி, நன்மைகள் உயர்ந்து சிறக்கட்டும். ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ தீபாவளித் திருநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரே சமயப் பண்டிகை. இந்து, சமண, சீக்கியசமயத்தார் வெவ்வேறு காரணங்களுக்காக இந்நாளை கொண்டாடினாலும் இந்தியா முழுவதும் கொண்டாடும் ஒரே பண்டிகை இதுதான். இத்திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி விளக்குகளால் உருவாகும் ஒளியானது எவ்வாறு இருளை அகற்றுகிறதோ, அதுபோல மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: அனைத்து மக்களும், இன்பத்தையும், நிம்மதியையும் பெற்று தீபாவளித் திருநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென தேமுதிக சார்பில் எனதுமனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: வண்ண ஒளிகளின் விழாவான தீபஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிமயமான இலக்கை நோக்கி உழைக்க நாம் அனைவரும் ஒளிகளின் விழாவான இந்நாளில் உறுதி யேற்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் எம்பி: மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருக வேண்டும். மக்களிடையே அன்பு,நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மக்களுக்கும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் தமாகா சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, முன்னாள் மத்தியஅமைச்சர் சு.திருநாவுக்கரசர் எம்பி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், புதிய நீதிக் கட்சி செயல்தலைவர் ஏ.ரவிக்குமார், கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு..ஆ.பொன்னுசாமி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், இந்திய தேசிய லீக் தேசியப் பொதுச் செயலாளர்எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x