Published : 26 Oct 2019 05:18 PM
Last Updated : 26 Oct 2019 05:18 PM

சுஜித்தை மீட்க புது முயற்சி; பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு

திருச்சி

குழந்தை சுஜித்தை மீட்கும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் பக்கவாட்டில் ஆழ்துளைக் கிணறு தோண்டி குழந்தையை மீட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை சுஜித் குழியில் விழுந்து 22 மணிநேரமான நிலையில், அவரை மீட்க புதிய முறையிலான முயற்சியை பேரிடர் மீட்புத்துறையினர் கையில் எடுத்துள்ளனர். மீட்புப் பணியை தீயணைப்புத்துறை டிஜிபி காந்திராஜன் நேரில் பார்வையிட்டார்.

மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாராணி தம்பதியின் மகன் சுஜித் வில்சன் (2). பிரிட்டோ ஆரோக்கியராஜ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் பாசனத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார்.

நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வில்சன் எதிர்பாராதவிதமாக கைவிடப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். குழந்தை விழுந்த தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்புத் துறையினர், மணப்பாறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறையினரும் விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 22 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணியில் அரசின் அத்தனை குழுக்களும் இறங்கி பணியாற்றி வருகின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு 8 மணிமுதல் நேரில் வந்து மீட்புப் பணியில் உடனிருக்கிறார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரத்யேகக் குழுவினர் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்றிரவு 9 மணிக்குமேல் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர் கண்டறிந்துள்ள நவீன ரோபோ கருவியைப் பயன்படுத்தி குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது.

நள்ளிரவு 3 மணி அளவில் குழந்தையைப் பிடித்திருந்த முடிச்சு அவிழ்ந்த நிலையில் அதிகாலையில் குழந்தை மேலும் கீழே 70 அடி ஆழத்திற்குச் சென்றது. இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு மேல் குழந்தையின் இதயத்துடிப்பை அறிய முடியவில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் குழந்தையை மீட்க 70 பேர் கொண்ட மாநில, தேசியப் பேரிடர் மீட்புக்குழு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்பி, மீட்புக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி மீட்புப் பணியை தங்கள் கைவசம் எடுத்துக்கொண்டனர்.
அவர்கள் நிலைமையை ஆராய்ந்து புதிய கருவி மூலம் குழந்தையை மீட்க முடிவு செய்துள்ளனர்.

பைப் போன்ற மூன்று விரிவடையும் இடுக்கி போன்ற நீளமான கம்பிகள் கொண்ட கருவியை உள்ளே இறக்க உள்ளனர். அந்தக் கம்பியின் முனையில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். கம்ப்ரசர் மூலம் ஹைட்ராலிக் கருவி உள்ளே இறக்கப்படுகிறது. அந்தக் கருவி உள்ளே செல்லும்போதே அதில் முன்னுள்ள சிறிய விளக்கு மூலம் கேமரா இயங்கும்.

பின்னர் கருவி குழந்தையின் அருகில் செல்லும்போது குழந்தையின் கையில் இடுக்கி போன்ற கருவி பிடித்து பின்னர் மெதுவாக மேலே இழுத்து கயிற்றால் முடிச்சிட்டு மேலே தூக்குவதாகத் திட்டமிட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மைக் குழுவினரிடம் இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்கும் வேறு சிறப்புக் கருவி எதுவும் இல்லை.

இதற்கு முன் மீட்கப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த மீட்புப் பணி நடக்கிறது. தற்போது குழந்தை 70 அடியிலிருந்து 80 அடி ஆழத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. குழந்தை மேலும் உள்ளே சென்றுவிடக்கூடாது என்கிற கவனத்துடன் வேலை செய்து வருகின்றனர்.

தற்போது இடுக்கி போன்ற கருவி வேலை செய்யாவிடில் பக்கவாட்டில் 50 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி அதிலிருந்து 30 அடி ஆழத்திலிருக்கும் குழந்தையை மீட்கலாம் என முடிவெடுத்துள்ளனர். தற்போது இந்தப் பணியில் சிறப்பாகப் பணியாற்றக்கூடிய என்.எல்.சி அமைப்பு மற்றும் தனியார் போர்வெல் நிறுவனத்தை அழைத்துள்ளனர். இதன் மூலம் பக்கத்தில் ஆழ்துளைக் கிணறு வெட்டி குழந்தையை மீட்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் தலைமையில் முடிவு செய்துள்ளனர். ஒன்றரை மணிநேரத்தில் இதைச் செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும் பக்கவாட்டில் ஊடுருவி மீட்கும் பணியைச் செய்ய உள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னர் நிலத்தின் தன்மையை ஆராய்ந்து உடனடியாகக் களத்தில் இறங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x