Published : 21 Jul 2015 11:37 AM
Last Updated : 21 Jul 2015 11:37 AM

ஏழாவது உலகம்: என்.ஆர்.ஐ.களை குறிவைக்கும் பக்தி பகடையாட்டங்கள்

வெளிநாடு வாழ் தமிழர்கள் என்போர் தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய சந்தை. புத்தகம் பதிப்பிப்பதில் ஆகட்டும், ஷாப்பிங் ஆகட்டும், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஏமாற்றப்படுவது சகஜம். மலேசியாவிலிருந்தோ சிங்கப்பூரிலிருந்தோ கிளம்பி சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கியவுடன் ஹோட்டலில் அறை பதிவு செய்வதில் தொடங்கி அவர்கள் திரும்பிப் போகிறவரை அவர்களைக் குறிவைத்து ஆயிரம் மோசடிகள் நடைபெறுகின்றன. அதில் ஒன்றுதான் பக்தியை வைத் துச் செய்யப்படும் மோசடி.

எனக்குத் தெரிந்த வெளிநாடு வாழ் மலேசியத் தமிழர் சென் னைக்கு வந்திருந்தார். பக்திமான் என்பதால், அவரை பிரபலமான கோயில் ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு கிடைத்தது. தரிசனமெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தபோது கோயிலுக்கு வெளியே நின்றிருந்த நபர் ஒருவர், மலேசியத் தமிழரைப் பெயர் சொல்லி அழைத்து, மலேசியாவில் இருந்தா வருகிறீர்கள்? என்று கேட்டார். மலேசிய நண்பர் ஆடிப் போய்விட்டார். அடுத்து அவரது மனைவி பெயர், குழந்தைகள் பெயரையெல்லாம் துல்லியமாகக் குறிப்பிட்டு, ‘சாமி உங்களை அழைத்து வரச் சொன்னார்’ என்றார் அந்த நபர்.

மலேசியத் தமிழருக்கு ஆச்சரியம். எப்படி சாமிக்கு நம்மைப் பற்றிய அத்தனை விவரங்களும் ஞானதிருஷ்டியில் தெரியவந்தது என்று ஆச்சரியப்பட்டுப் போனார். அதற்கடுத்து அவர் அந்தக் கோயிலின் சாமியாரைச் சந்தித்தார். அவர் மேலும் துல்லியமான சில விஷயங்களைச் சொன்னார். மலேசியத் தமிழர் அந்தக் கோயிலின் தீவிர பக்தரானார். தொடர்ந்து லட்சக்கணக்கில் நன்கொடைகளை வாரி இறைத்தார் - நாங்கள் அந்த அதிசயம் எப்படி நடந்தது என்று துப்பறிந்து சொல்கிறவரை.

உண்மையில் அந்தக் கோயி லைச் சேர்ந்தவர்கள் எப்படி ஏமாற்று கிறார்கள் என்பதைக் கேட்டால், ஆச்சரியத்தில் வாய் பிளந்துவிடுவீர் கள். சென்னை விமான நிலை யத்தில் இறங்கும்போதே முகத்தை வைத்தே இவர்கள் இன்னார் என்று அடையாளம் கண்டுவிடுகின்றனர். அதற்கடுத்து ஹோட்டலில் அறை எடுக்கும்போது இவர் இன்னார் தான் என மேலும் உறுதிப்படுத் திக்கொள்கிறார்கள். அதற்கடுத்து ஸ்கெட்ச் வேலைகள் ஆரம்பமாகின் றன.

நம்முடைய வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு வீக் பாயிண்ட் உண்டு. பரிசுக் குலுக்கல் என்று சொன்னால் தங்களுடைய ஜாதகத்தையே ஒப்பித்து விடுவார்கள். அவர்கள் தங்கியிருக்கும் வாரம் முழுக்க அவர்களைப் பின்தொடரு ம் இந்த சாமியாரின் அடிப்பொடிகள், லக்கி ட்ரா அதுஇது என்று ஏதாவது சொல்லி அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவார்கள். அவர்கள் காதில் விழுகிற மாதிரி அந்தக் கோயிலின் அருமை பெருமைகளைப் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் கவனிக்கும் அந்த வெளிநாட்டு நபர்கள், அந்தக் கோயிலுக்குச் செல்வதென்று முடிவெடுப்பார்கள்.

எத்தனை வெளிநாட்டினர் கோயிலின் சுற்று வட்டாரத்தில் இருக்கிறார்கள் என்பதை ஒரு அறையிலிருக்கும் ‘சாமி’க்கு அப்டேட் செய்துகொண்டே இருப் பார்கள். அவர்கள் வந்திறங்கும் கார், அவர்கள் ஆடைகள், கையிலி ருக்கும் பொருட்கள் என எல்லா விஷயங்களும் அப்டேட் செய்யப்படும்.

தவிர ஏற்கெனவே அவர்களது முகவரி, குடும்ப விவரங்கள் லக்கி ட்ரா என்கிற பெயரில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். சாமி அவர்களைப் பார்த்து அசத்துவது இப்படித்தான்.

அதற்கடுத்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குப் பூஜை, செய்வினை எடுத்தல், மந்திரித்தல் என பயமுறுத்தும் படலங்கள் ஆரம்பமாகும். இந்த அசைன்மெண்ட் முடிவுக்கு வரும்போது, அந்த வெளிநாடுவாழ் தமிழர் அந்தச் சாமியின் பக்தனாக மாறியிருப்பார். இந்த மந்திரச் சுழலில் சிக்கிப் பணத்தைத் தொலைத்த ஏராளமானோரின் கதைகள் இருக்கின்றன. பணம் அதிகம் புழங்கும் இடத்தில் போட்டி, பொறாமை, மோதல் எல்லாம் ஏற்படுவது இயல்புதானே.

வெளிநாடுவாழ் தமிழர்களைப் பிடித்து சாமியாரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் புரோக்கர்களிடையே மிகப் பெரிய தகராறு ஒன்று ஏற்பட்டு அது கொலைவரைக்கும்கூட போனதாக உள் விவகாரங்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள். அப்படி வெளியே துரத்தப்பட்ட ஒரு புரோக்கர்தான், தாங்கள் வலைவீசிப் பிடிக்கும் வித்தையை எனக்குச் சொன்னார். அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

கட்டுரையாளர்: சரவணன் சந்திரன்,பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: saravanamcc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x