Published : 26 Oct 2019 08:47 AM
Last Updated : 26 Oct 2019 08:48 AM
சென்னை
தமிழக அரசின் சார்பில் நவம்பர் 1-ம் தேதி, முதல்முறையாக தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக ரூ.10 லட்சத்தை தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கியுள்ளது.
சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.1-ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார்.
அதன்படி, இந்த ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிஅரசாணை வெளியிடப்பட்டுள் ளது. அதில் கூறியிருப்பதாவது:பெரியார், அண்ணா,காமராஜர், ஜீவா, ம.பொ.சி.,சங்கரலிங்கனார், மார்சல்நேசமணி உள்ளிட்ட தலைவர்கள் மொழிவாரி மாநிலங்கள்பிரிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் அடிப்படையில் மெட்ராஸ் மாகாணமாக இருந்தது, மெட்ராஸ் ஸ்டேட்,ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா என 1956-ம் ஆண்டுநவம்பர் 1-ம் தேதி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் நவ.1-ம் தேதியை மாநிலம் உருவாக்கப்பட்ட தினமாக கொண்டாடி வருகின்றன. மெட்ராஸ் ஸ்டேட் என்பது பின்னர் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுநவம்பர் 1-ம் தேதி முதல், தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதில் கருத்தரங்கம், கவியரங்கம், இளையோர் அரங்கம் ஆகியவை நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.