Published : 26 Oct 2019 08:33 AM
Last Updated : 26 Oct 2019 08:33 AM

தீபாவளி பண்டிகையின்போது குடிநீர் வரவில்லை என்று புகார் வந்தால் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை: குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் எச்சரிக்கை

சென்னை

தீபாவளி பண்டிகையின்போது, குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்தால் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 9 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 347 பேரூராட்சிகள் மற்றும் 48 ஆயிரத்து 948 கிராம குடியிருப்புகளைச் சேர்ந்த 4 கோடியே 23 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,சென்னை மாநகரம் தவிர இதர பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 1,920 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகித்து வருகிறது.

தற்போதைய வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் தொடர்ச்சியான விழாக்காலங்களில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டும், திட்டங்களை சிறப்பாக ஆய்வு செய்யும் பொருட்டும் 207 பிரிவுகளாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டு, குடிநீர் திட்டங்களின் பராமரிப்பு மேலாண்மை செய்யப்படுகிறது.

தற்போதைய விழாக்காலத்தை கருத்தில் கொண்டு பராமரிப்பில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்துதரமான, சீரான குடிநீர் குறித்த நேரத்தில் வழங்க அனைத்து பராமரிப்பு பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் முன் அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் சென்றடைவதை உறுதி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணியில் குந்தகம்ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குடிநீர் வழங்குவதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனடியாக அந்தந்த மாவட்டத்தில்உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்களை அணுக வேண்டும். தலைமை அலுவலகத்தில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் 94458 02145 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x