Published : 31 Jul 2015 09:40 AM
Last Updated : 31 Jul 2015 09:40 AM

கலாமுக்கு 4 லட்சம் பேர் அஞ்சலி

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நல்லடக்க நிகழ்ச்சியின்போது நடை பெற்ற சில முக்கிய சம்பவங்கள்:

* அப்துல்கலாம் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி இருந்தனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஜெய்ஹிந்த் அன்பு, தனது உடலில் மூவர்ணக் கொடியையும், அப்துல்கலாம் உருவத்தையும் வரைந்திருந்தார்.

* அடக்க ஸ்தலத்தில் காலையில் இருந்தே வெயிலில் காத்திருந்ததால் பொதுமக்கள் தாகத்தால் தவித்தனர். அருகிலேயே குடிநீர் கிணறு இருந்தாலும், அது பாதுகாப்பு வளையத்தில் இருந்ததால் பொதுமக்களால் கிணற்றை நெருங்க முடியவில்லை. அவர்களுக்கு உதவும் விதமாக கிணற்றில் இருந்து நீர் இறைத்து பாட்டில்களில் நிரப்பி பொதுமக்களுக்கு போலீஸார் வழங்கினர்.

* அடக்க ஸ்தலத்தில் பிரதமருக்கு நேர் எதிரே அணிவகுத்து நின்ற முப்படை வீரர்களில், துப்பாக்கியுடன் நின்றிருந்த கடற்படை வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* உடல் நல்லடக்கம் முடிந்த பின்னர் ஏராளமான பொதுமக்கள் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர். சிலர் அங்கிருந்து பிடிமண்ணையும், மலர்களையும் சேகரித்து கலாம் நினைவாக தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

* அப்துல்கலாம் வீடு அருகே உள்ள அவர் படித்த அரசு தொடக்கப் பள்ளியில் அஞ்சலிக்காக அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. கலாம் குறித்து இளைஞர்கள் எழுதுவதற்கு குறிப்பேடு வைத்திருந்தனர். அதில், பல இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன், ‘கலாமின் கனவை நனவாக்குவோம்’ என்று உறுதிமொழி ஏற்கும் வகையில் ஆர்வமுடன் எழுதி கையெழுத்திட்டனர்.

* கலாம் மறைந்த தினமான 27-ம் தேதி முதல் அடக்கம் செய்யப்பட்ட 30-ம் தேதி வரை அஞ்சலி செலுத்துவதற்காக மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ராமேசுவரம் வந்து சென்றதாக உள்ளூர் போலீஸார் தெரிவித்தனர்.

* அடக்க தினத்தன்று ராமேசுவரத்தில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு செய்யப்பட்டதால் அஞ்சலி செலுத்தவந்தவர்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்தனர். ராமகிருஷ்ணா மடம் போன்ற சில இடங்களில் இடைவிடாமல் அன்னதானம் நடந்ததால் மக்கள் ஓரளவு சமாளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x