Published : 24 Oct 2019 09:41 AM
Last Updated : 24 Oct 2019 09:41 AM

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவைத் தொகை ரூ.6,375 கோடியை விடுவிக்க வேண்டும் நிர்மலா சீதாராமனிடம் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை 

சென்னை

தமிழக உள்ளாட்சி அமைப்பு களுக்கு நிலுவையில் உள்ள ரூ.6,375 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்துக்கான நிதி தேவை குறித்த கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக உள்ளாட்சி அமைப்பு களுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி கடந்த 2018-19-ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய அடிப்படை மானியத்தின் 2-வது தவணைத் தொகை ரூ.1,608 கோடியே 3 லட்சத்தை விடுவித்ததற்காக முதல்வர் சார்பிலும், என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிதி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை பணிகள் சிறப்பாக நடக்க உதவியாக இருக்கிறது.

மேலும், இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கிரைண்டருக்கு 12-ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், இயந்திரங்கள் மூலம் உதிரிபாகங்கள் தயாரிப்புக் கான ஜிஎஸ்டியை 12 சதவீதமாக குறைத்திருப்பது பெரும்பாலான சிறு, குறு தொழில் பிரிவுகளுக்கு போதிய பலன் வழங்காது. எனவே, அதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 முதல் 2019-20 வரை ரூ.2,029 கோடியே 22 லட்சம் செயல்பாட்டு மானியத் தொகையும் 14-வது நிதி ஆணைய பரிந்துரைப் படி 2019-20-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.4,345 கோடியே 47 லட்சமும் நிலுவையில் உள்ளன. இந்தத் தொகை களை விரைவாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x