Published : 23 Oct 2019 09:58 AM
Last Updated : 23 Oct 2019 09:58 AM

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற ஆர்வம் காட்ட வேண்டும்

மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சந்திரமோகன் தெரிவித்தார். வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி ’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை `இந்து தமிழ்' நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன.

இதில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கடந்த ஒரு மாதமாக ஆய்வுப் பணி களில் ஈடுபட்டு, தங்களது பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, பல்வேறு தலைப்புகளில் அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, அதற்கான தீர்வு களை உருவாக்குகின்றனர்.

மதுரை மண்டலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தயாரித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் அறிவியல் திருவிழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குழுக்களாக இணைந்து தயாரித்த அறிவியல் படைப்புகளுடன் பங்கேற்றனர். விழாவில் விஐடி பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சந்திரமோகன் பேசியதாவது: இன்றைக்கு உயர்ந்த 10 நிறுவனங்களில் கூகுள் நிறுவனமும் ஒன்று.

இந்த நிறுவனம் மாணவர் ஒருவரால் தொடங்கப்பட்டது. இவர் ஒரு ஆய்வுக்காக நூலகத்தில் புத்தகங்களைத் தேடியபோது, அவருக்கு கூகுள் சாப்ட்வேர் கண்டுபிடிக்கும் சிந்தனை தோன்றியது. 15 ஆண்டு களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். மூன்றாம் ஆண்டு படித்த கல்லூரி மாணவர் ஒருவர், அருகில் உள்ளவர்களைப் பற்றி கமெண்ட் போடுவது தொடர்பாக ‘பேஸ் நாக்’ என்ற சாப்ட்வேர் ஒன்றைக் கண்டறிந்தார். அதுதான் தற்போது ‘பேஸ்-புக்’ ஆக வளர்ந்துள்ளது. அறி வியல் தேவை கருதி இதுபோன்ற கண்டுபிடிப்பு மக்களிடம் பரவியுள்ளது.

இங்கு பங்கேற்றுள்ள மாணவர்கள் பல்வேறு படைப்புகளை கொண்டு வந்துள்ளீர்கள். அதற்குப் பரிசு கிடைக்காவிட்டாலும் கவலை வேண்டாம். சில நேரம் தோல்விகளே நல்ல இடத்துக்கு உங்களை உயர்த்தும். அரசியல் உட்பட பல்வேறு தோல்விகளை சந்தித்த ஆப்ரகாம்லிங்கன் தனது 54-வது வயதில் ஜனாதிபதி ஆனார். ஒவ் வொருவரும் ஒரு குறிக்கோள் நிர்ணயித்து, அதை நோக்கி முயற்சித்தால் வெற்றி உறுதி.

இங்கு அறிவியல் படைப்புகளை சமர்ப்பித் தோர், அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் அறிவியல் சாதனைக்கு தற்போது ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. நோபல் போன்ற உயரிய பரிசுகளைப் பெறும் அளவுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். கண் டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதிலும் ஆர்வம் காட்டுங்கள். காப்புரிமை இருந்தால் உங்களது படைப்புகளை இந்தியா மட்டுமின்றி உலகளவில் கூட வாங்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் எஸ்.தினகரன் பேசியதா வது:

பள்ளியில் படிக்கும்போதே மாணவர்கள் அறியாமையை அகற்றி அறிவியலைப் புரிந்து கொள்ளவும், அறிவியல் படைப்புகளை உருவாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. படித்தவர்கள் மத்தியில் இருக்கும் தயக்கம் பள்ளிக் குழந்தைகளிடம் இருக்காது.

பள்ளிக் குழந்தைகள் தயக்கமின்றி எந்த கேள்வியையும் எளிதில் கேட்பார்கள். படித்தவர்களைவிட மாணவ விஞ்ஞானிகள் அதிகம் சிந்திப்பவர்களாக உள்ளனர். அவர்கள் எதிலும் ஒரு ஆர்வத்தோடு இருப்பார்கள். அதுபோன்ற மாணவர்களை வழிகாட்டி ஆசிரியர் நெறிப்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். சில மாணவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் காப்புரிமை பெறும் அளவுக்கு சிறந்த படைப்புகளாக இருக்கும்.

அந்தளவுக்கு திறன் மிக்கவர்கள் இளந்தளிர் விஞ்ஞானிகள். மேலும், தற்போது அறிவியல் ஆய்வறிக்கைகள் குறைந்து வருகின்றன. அறிவியல் படிக்கும் ஆர்வமும் குறைந்து வருகிறது. அவற்றைத் தூண்டுவதற்கான தூண்டுகோலாக நாளைய விஞ்ஞானி நிகழ்ச்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

அறிவியல் இயக்க மாநிலப் பொருளாளர் ஆர். ஜீவானந்தம் பேசியதாவது:

`இந்து தமிழ்' நாளிதழின் இந்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல்வேறு மக்களால் வாசிக்கப்படும் இந்த நாளிதழ், வாசிப்பை நேசிக்க வைக்க, புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக செயல்படுத்துகிறது. இந்த அறிவியல் திருவிழாவும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற் றோரை ஒருங்கிணைக்கச் செய்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைப் பொதுத்தளத்தில் எடுத்துச் செல்கிறது. மாணவர்களுக்கென நாங்களும் அறிவியல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

ஆனாலும் `இந்து தமிழ்' நாளிதழும், விஐடி பல்கலை.யும் இணைந்து நடத்தும் அறிவியல் திருவிழா மாணவர்களுக்குப் பெரிதும் பயன் அளிக்கும். மாணவர்களின் மாதிரி ஆராய்ச்சியால் திருப்பூர் போன்ற இடங்களில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. கர்ப்பிணிகள் பாதிப்பு குறித்த மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை ஒன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. `இந்து தமிழ்' நாளிதழில் பிற நாளிதழில் இல்லாத சிறந்த கட்டு ரைகள் வெளியாகின்றன. மாணவர்கள் வாங்கி வாசிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். `இந்து தமிழ்' நாளிதழின் விற்பனைத் துறைத் தலைவர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார்.

அறிவியல் திருவிழாவில் 196 தலைப்புகளில் மாணவர் குழுக்கள் தங்களது மாதிரி ஆய்வு களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வுகளில் 25 சிறந்த ஆய்வுகள் தேர்ந் தெடுக்கப்பட்டு, வேலூர் விஐடி பல்லைக்கழக வளாகத்தில் நவம்பரில் நடக்கும் மாநில அறிவியல் திருவிழாவில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டன. அறிவியல் திருவிழாவில் பங்கேற்ற ஆசிரி யர்கள், பெற்றோரிடையே அறிவியல் தொழில் நுட்பம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.

அறிவியல் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தியாகராஜன், செயலர் பாலகிருஷ்ணன் உள் ளிட்டோர் பேசினர். முன்னதாக `இந்து தமிழ்' நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அறிவியல் இயக்க மதுரை மாவட்ட செயலர் மலர்கொடி வரவேற்றார். அறிவியல் இயக்க நிர்வாகி வெண்ணிலா அறி வியல் பாடல் பாடினார்.

பெருமையாக கருதுகிறோம்

அமெரிக்கன் கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், எங்கள் கல்லூரியில் நடந்துள்ள பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளிலேயே மிக முக்கியமானதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதை அறிந்தேன். மாணவர்களின் படைப்புகள் மிகவும் ஆச்சரியப்படுத்தும் அளவில் இருந்துள்ளது. இந்த மாணவர்களின் உயர்வில் `இந்து தமிழ்' நாளிதழோடு இணைந்து எங்கள் கல்லூரியின் பங்களிப்பும் இருந்துள்ளதை பெருமையாகக் கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தூண்டுகோலாக அமையும்

வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சார்பில் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் உயர்வுக்காக ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நாளைய விஞ்ஞானி நிகழ்ச்சி மூலம் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானியாகும் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கிறது.

கல்லூரி மாணவர்களுக்கு நிகரான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இவர்களை ஊக்கப்படுத்தும் மிக உயர்ந்த சமூகப் பணியை ‘இந்து தமிழ்’ நாளிதழ் செய்து வருகிறது. 9 மாவட்ட மாணவர்கள் பல நாட்களாக உழைத்து உருவாக்கிய கண்டுபிடிப்புகளை மிக கஷ்டப்பட்டு மதுரைக்கு கொண்டு வந்து போட்டியில் பங்கேற்றிருப்பது அவர்களின் அதீத ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்த மாணவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் விரும்பும் லட்சியத்தை அடைவார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தில் வருங்காலங்களில் ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக மிகப்பெரிய தூண்டுகோலாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x