Published : 22 Oct 2019 10:53 AM
Last Updated : 22 Oct 2019 10:53 AM

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சுமுகத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துக; வாசன்

சென்னை

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சுமுகத் தீர்வு காண மத்திய அரசு உடனடிப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (அக்.22) வெளியிட்ட அறிக்கையில், "பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, டெபாசிட் வட்டி விகிதக் குறைப்பு, சேவைக்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக இந்திய வங்கிகள் சங்கத்தினர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று ஒரு நாள் வங்கி யூனியன்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதாவது தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரம் வங்கி ஊழியர்களும், நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பணியாளர்களும் பங்கேற்கின்றனர். இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும்போது அன்றாடம் வங்கிகளை நாடி வரக்கூடிய சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள்.

நாடு தழுவிய அளவில் அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பணப்பரிவர்த்தனை, வங்கி சேவை, வருவாய் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகும்.

மத்திய அரசு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கை என்கிற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைக்க எடுக்கும் முயற்சிக்கு வங்கி ஊழியர் சங்கங்களிடம் முழு ஒத்துழைப்பைப் பெற்று அவர்களின் சம்மதத்துடன் இணைக்கலாம். குறிப்பாக வங்கி அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களிடம் பேச்சுவார்த்தையை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் வங்கி சேவைப் பணிகள் அன்றாட, அவசிய, முக்கியப் பணியாக இருப்பதால் இந்த வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழிற்சங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளிடம் முக்கியப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், பொதுமக்களுக்கான வங்கி சேவைப் பணிகள் தடையின்றித் தொடரவும், வங்கிகள் தொடர்ந்து இயக்கப்படவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x