Published : 22 Oct 2019 09:07 AM
Last Updated : 22 Oct 2019 09:07 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து ஒத்திகை

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில போலீஸார் மற்றும் என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் இணைந்து, குண்டுகளை வெடிக்கச் செய்து நேற்றிரவு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடந்த செப்.16-ம் தேதியன்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. டெல்லியில் இருந்து ஹர்தர்ஷன்சிங் நாக்பால் என்பவரின் பெயரில் வந்த அந்தக் கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செப்.30-ம் தேதி பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து ஏற்கெனவே சிஐஎஸ்எப் போலீஸாரின் கட்டுப் பாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் நீதிமன்ற வளாகம் என பல்வேறு இடங்களில் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருந்தது. வழக்கறிஞர் கள் மற்றும் பொதுமக்கள் அனை வரும் தங்களின் அடையாள அட்டையை காண்பித்த பிறகே உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் செப்.30 அன்று எவ்வித அசம்பா விதமும் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த மிரட்டல் கடிதம் எதிரொலியாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிஐஎஸ்எப் மற்றும் தமிழக கமாண்டோ படையினருடன் என்எஸ்ஜி எனப்படும் தேசிய கமாண்டோ படையினரும் இணைந்து நேற்றிரவு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் நவீன ரக வாகனங்களுடன் குவிக்கப் பட்டனர்.

தீவிரவாதி போல வேடமணிந்த நபரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்வது போலவும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அவற்றால் ஏற்படும் விளைவுகளை எவ்விதம் கையாள்வது என்பது குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையால் உயர் நீதிமன்ற வளாகம் நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x