Published : 21 Oct 2019 11:41 AM
Last Updated : 21 Oct 2019 11:41 AM

அவிநாசி, ஊத்துக்குளி சுற்று வட்டார கிராமங்கள் உட்பட திருப்பூர் மாவட்ட புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு- ‘விநியோகிக்கப்படும் தண்ணீரும் தூய்மையாக இல்லை’

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திருப்பூருக்கான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலங்கி வரும் குடிநீர்.

பெ.ஸ்ரீனிவாசன்

திருப்பூர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்கிறது. இதனால், முக்கிய நீர் நிலைகளுக்கு அதிக தண்ணீர் வரத்து ஏற்பட்டு, ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருப்பூருக்கு பிரதான குடிநீர் ஆதாரங்களாக உள்ள நொய்யல், பவானி ஆறுகள் மற்றும் பரம்பிக் குளம் - ஆழியாறு, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கும் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகராட்சி பகுதிகள், திருப்பூரின் வடக்கு, அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பவானி ஆற்றிலிருந் தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தி லிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கன மழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தோடும் நிலையிலும் அவிநாசி, ஊத்துக்குளி வட்டங்களிலுள்ள புறநகர், கிராமப் புற பகுதிகளில் போதிய குடிநீர் விநியோகம் இல்லாமல், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பொதுக் குழாய்களில் போதிய தண்ணீர் வராமல், பல இடங்களில் அதிக விலை கொடுத்து கேன் குடிநீரை வாங்கும் நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விலைக்கு குடிநீர்

இதுதொடர்பாக அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவரும், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருபவருமான ராம்குமார் என்பவர், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, 'எங்கள் பகுதியில் பொதுக் குழாய்களில் வரும் குடிநீரை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. கடந்த 3 நாட்களாக எந்தவித முன்னறி விப்பின்றி குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. இன்று (நேற்று) காலை சிறிது நேரம் விநியோகிக்கப் பட்டது. குடிநீர் கிடைக்காததால், கடைக்கு சென்று அதிக விலை கொடுத்து கேன் குடிநீரை வாங்கினோம்' என்றார்.

சுகாதாரம் இல்லை

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் எஸ்.காதர் பாட்சா கூறும்போது, ‘புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து திருப்பூருக்கு எடுத்துவரப்பட்டு விநியோகிக்கப் படும் குடிநீர் சுத்தமாக இல்லை. செம்மண் கலந்து சேறாக வருகிறது. இந்த நீரை நம்பி, கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து திருப்பூர் கோவில்பாளையம் வரை சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வடிகால் வாரியம் இணைந்து, தரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

சுத்திகரிப்பதில் சிக்கல்

குடிநீர் வடிகால் வாரிய பொறி யாளர் செல்லமுத்துவிடம் கேட்ட போது, ‘உதகையில் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றுக்கு தண்ணீர் கலங்கி சகதியுடன் வருகிறது. இதனால், சுத்திகரிப்பு செய்வதில் சிக்கல் உள்ளது. முடிந்தவரை சுத்திகரிப்பு செய்து கொடுக்கிறோம். செம்மண் நிறைந்து சுத்திகரிப்பு கட்டமைப்புகள் பாதிக்கப்படுவ தால், நிறுத்தி, நிறுத்தி இயக்க வேண்டியுள்ளது. மலைக்கு மேல் மழை குறைந்தால் சீராகிவிடும். ஒரு சில தினங்களில் குடிநீர் தட்டுப்பாடு சரியாகிவிடும்' என்றார்.

இதேபோல், ஊத்துக்குளி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் போதிய அளவு விநியோகிக்கப்படாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி கூறும்போது, ‘2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், ஊத்துக்குளி வட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

ஊத்துக்குளி பகுதி பயன்பெறும் வகையில், ஈரோடு மாவட்டம் கொடிவேரி பகுதியில் இருந்து விரைவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x