Published : 19 Oct 2019 05:11 PM
Last Updated : 19 Oct 2019 05:11 PM

ஆதாரங்களைக் காட்ட நான் தயார்; அறைகூவலை ஏற்பாரா ராமதாஸ்?- ஸ்டாலின் பதில்

சென்னை

ராமதாஸ் கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட தான் தயார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்திருக்கும் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பார்த்தார். பின்னர், அத்திரைப்படம் குறித்து புகழ்ந்திருந்த ஸ்டாலின், "அசுரன் திரைப்படம் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும், சாதிய வன்மத்தை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இதுகுறித்து கருத்து தெரிவித்த ராமதாஸ், "முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஸ்டாலின் உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று மு.க.ஸ்டாலின், ராமதாஸுக்கு பதில் அளிக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?" என சவால் விடுத்திருந்தார். மேலும், அந்தப் பதிவுடன், முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவை ஸ்டாலின் இணைத்திருந்தார்.

இந்நிலையில், ராமதாஸ் மீண்டும் இவ்விவகாரத்தில் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.19) தன் ட்விட்டர் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985 ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்குத் தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? ஆதவற்றோர் இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை" என ராமதாஸ் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், ராமதாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய முகநூல் பக்கத்தில், "முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்குப் பதிலாக பதிவு கொடுத்தேன்.

அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார்; இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதி செய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! ராமதாஸ் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!

விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்," என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x