Last Updated : 19 Oct, 2019 04:36 PM

 

Published : 19 Oct 2019 04:36 PM
Last Updated : 19 Oct 2019 04:36 PM

விக்கிரவாண்டியில் வெல்லப்போவது யார்? இறுதிகட்ட கள நிலவரம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.

இவர்களில் அதிமுக , திமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது என்பது யாவரும் அறிந்ததே. இத்தொகுதியில் 44 சதவீதம் வன்னியர் சமூக மக்களும், 30 சதவீத்தினர் பட்டியலின மக்களும், 26 சதவீதம் பிற மத, சாதியினர் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் நிலவரம் குறித்து திமுகவினர்களிடம் கேட்டபோது, "திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வ.வேலு, செல்வகணபதி, ஆ,ராசா, தா.மோ. அன்பரசன், விஜயன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தமிழகத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட திமுக ஊராட்சி செயலாளர்களுக்கு தொலைபேசி செய்து பேசி உற்சாகமூட்டியுள்ளார். துரைமுருகனும், ஜெகத்ரட்சகனும் கடந்த 2 நாட்களாக தொகுதியில் உள்ள வன்னியர்கள் உள்ள பகுதிக்கு சென்று 'கொத்து' எனப்படும் பரம்பரையில் உள்ள வயதில் மூத்தவர்களை அழைத்து அருகில் அமரவைத்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசிவருகின்றனர்.

மேலும் 1.70 லட்சம் வாக்காளர்களுக்கு தற்போது வரை '2 வாக்குறுதிகள்' வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் செலவுகளை அந்தந்த அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் ஏற்றுகொள்ள வேண்டும் என கட்சி அறிவித்துள்ளதால் சற்றே தடுமாற்றத்துடன் தான் செலவு செய்து வருகிறோம்," என்றனர்.

இதேபோல அதிமுகவினர்களிடம் கேட்டபோது, "அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், பாண்டியராஜன், வேலுமணி, கேபி அன்பழகன், வீரமணி, எம் சி சம்பத், முன்னாள் எம்.பி.க்கள் அருண் மொழித்தேவன், லட்சுமணன் மற்றும் எம் எல் ஏக்கள் உள்ளூர் நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கொடுத்துள்ளோம். மேலும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் வாக்களர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திமுகவினர் வாக்காளர்களுக்கு கடந்த எம்.பி. தேர்தலில் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. தொகுதியில் உள்ள 2 லட்சம் வாக்காளர்களுக்கு 3 வாக்குறுதிகள் கொடுக்க திட்டமிட்டு 2 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன் மேலும் ஒரு வாக்குறுதி கொடுக்கப்படும்," என்றனர்.

தற்போதைய நிலவரப்படி இரு கட்சிகளும் பிரச்சாரத்தில் சம வேகத்தில் ஓடிக்கொண்டு இருப்பதால் இவர்தான் வெற்றி பெறுவார் என உறுதியாக சொல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 30 மணிநேரத்திற்கு மேல் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x