Published : 19 Oct 2019 10:12 AM
Last Updated : 19 Oct 2019 10:12 AM

‘தமிழ்க்குடியே  மூத்தக்குடி’ சான்றளிக்கும்  கீழடி: தமிழ் வளர்ச்சித்துறை தலைவர் மி.சி.தியாகராசன் நம்பிக்கை 

ஆர்.டி.சிவசங்கர்

தமிழ்க்குடியே மூத்தக்குடி என்பதற்கு தக்க சான்று கீழடி அகழாய்வில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவர் முனைவர் மி.சி. தியாகராசன்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவரை சந்தித்தோம். நம்மிடையே உரையாடத் தொடங்கிய அவர் ‘கீழடி ஆய்வுகள் மூலம் தமிழ்க்குடிமூத்தக்குடி என்றசான்று கிடைக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

8-வது உலக தமிழ் மாநாட்டில்,இயல், இசை, நாடகத் தமிழுடன் அறிவியல் தமிழை நான்காவது தமிழாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவியல் தமிழ் மூலம் இலக்கியம் மட்டும் இல்லாமல், மருத்துவம் மற்றும் பொறியியலையும் தமிழில் கற்பிக்கலாம். இதை 1815-ல் சாமுவேல் புஸ்தரீன் வலியுறுத்தி இருந்தார். கலைமாமணி பட்டம் பெற்ற தஞ்சையில் உள்ள மருத்துவர் சு.நரேந்திரன் மருத்துவத்தை தமிழில் எளிதில் கற்பிக்க முடியும் எனப் பல நூல்களை எழுதி அதன்வழியே வலியுறுத்தியுள்ளார். உலகம் எங்கும் தமிழைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில் அரசு ஆண்டுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்குகிறது.

இதன்மூலம் மலையின மக்கள் பேசும் சொற்களைத் திரட்டி கலைச்சொல் அகராதி உருவாக்கினால், அதன் வாயிலாக மொழி வளர்ச்சிக்குப் பயன்படும். அதிலுள்ள அறிவியல் கலைச்சொற்களைத் தனியாக பிரித்து தொகுத்தால் அறிவியல் தமிழ்த்
துறை வளர்ச்சிக்குப் பயன்படும். இதன் ஒரு பகுதியாக தமிழ் பல்கலைக்கழகம், உதகை அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு துறை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ்த்துறை மற்றும் உதகை தமிழ் உயராய்வு துறைக்கு இடையேஎண்ணற்ற பணிகள் மேற்கொள்ள முடியும்.

உதகை அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறையுடன் ஏற்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம்மூலம் மலைவாழ் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்று தரப்படும். தமிழ் படிக்கும் நாம் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதும் சூழலை உருவாக்க வேண்டும்.
வாசிப்பு பழக்கத்தால் அதை நடைமுறைப்படுத்த முடியும். ஊடகங்களிடம் செய்தியை சேர்க்கும் நோக்கம் மட்டுமே உள்ளது. சில ஊடகங்கள் தவிர, பிற ஊடகங்கள் மொழியை முன்னிலைப்படுத்துவதில்லை. பிழையின்றி எழுத பிழையற்ற நூல்களை படிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆய்வு மாணவர்கள்கூட வாக்கிய அமைப்பு முதல் கட்டுரைகள் வரை பிழையின்றி எழுவது இல்லை. தமிழர்களுடைய பண்பு வரவேற்பது தான். கண்டிப்பாக இருமொழி தேவை.

மும்மொழியும் தவறில்லை. படித்துவிட்டு பிற மொழிகளில் இல்லாத சிறப்பு தமிழில் உள்ளது என்பதை உணர வேண்டும். தமிழ் அழிந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழில் எண்ணற்றஇலக்கியங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எழுத்தை தாண்டி மாறிவரும் சூழல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழ் பல வழிகளில் பயன்படுகிறது. கீழடி அகழாய்வுகள் தமிழ் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்துகிறதா? என்று கேட்டதற்கு, கீழடி ஆய்வுகள் தமிழ் மொழி வரலாற்றில் ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்தும். அனைத்து உலக நாடு களையும் திரும்பிப் பார்க்கக்கூடிய வகையில் தமிழர் களுக்கு பெருமை கிடைக்கும். தமிழ்க்குடி மூத்தக்குடி என்ற தக்கசான்று கீழடி ஆய்வில் கிடைக்கும்.

அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழை முதன்மைப்படுத்தும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன.

தேர்வை எதிர்கொள்ளவும், அரசுப் பணிக்கு தமிழ் மொழிப்பாடம் துணை நிற்கும். பிற துறை சார்ந்த பாடங்கள், அறிவியல் யுகத்தை உருவாக்கவும், கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் பயன்படுகின்றன. பிறபாடங்கள் வயிற்று பிழைப்புக்கானது. தமிழ் கல்வி
வாழ்க்கைக்கானது.உலகம் முழுவதும் தமிழை அறியச் செய்யும் வகையில் தமிழ் வளர் மையம், தமிழ் பண்பாடு மையம் ஏற்படுத்தி தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ் வளர் மையம் மூலம் மொழிப்பாடமும், தமிழ்ப் பண்பாட்டு மையம் மூலம் பண்பாடு,கலாச்சாரத்தை உலகமறியச் செய்ய தமிழ்ப்பல்கலைக் கழகம் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் செலவில் தமிழில் முன்னெழுத்து, பெயரைத் தமிழில் எழுத ஆட்சி மொழி தமிழ்ச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பயிலரங்கை நடத்தி வருகிறது, என நம்பிக்கை தெரிவித்து பேட்டியை முடித்துக் கொண்டார் மி.சி. தியாகராசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x