Published : 17 Oct 2019 09:38 PM
Last Updated : 17 Oct 2019 09:38 PM

கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு 

சென்னை

காவலர் நாள் அனுசரிக்கப்படுவதை அடுத்து டிஜிபி அலுவலகத்தில் அதற்கான நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பு நடப்பதால் சென்னை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

“21.10.2019 அன்று காலை 08.00 மணிக்கு, காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 17, 18 மற்றும் 19-ம் தேதிகளில் இது தொடர்பான ஒத்திகை நடைபெற இருக்கிறது. ஆகவே 19.10.2019 (இறுதி ஒத்திகை நாள்) மற்றும் 21.10.2019 ஆகிய இருநாட்களுக்கு காலை 07.00 மணி முதல் 09.00 வரை கீழ்காணும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

1. சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சாலை சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.

2. சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடது புறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர் பிரதான சாலை மற்றும் டாக்டர் பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

3. கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை அணுகு சாலை வழியாக கடற்கரை சாலைக்கும், கலங்கரை விளக்கம் வழியாக காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கும் செல்லலாம்.

4. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை அணுகு சாலை வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை அணுகு சாலை வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டப்படுகிறது”.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x