Published : 17 Oct 2019 11:27 AM
Last Updated : 17 Oct 2019 11:27 AM

கழிவுநீர் நிரம்பிய குளங்கள்: கனவுத் திட்டத்தில் கரும்புள்ளி

பெ.ஸ்ரீனிவாசன்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள மிகப்பெரும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் கழிவுநீர் நிரம்பி காணப்படுவது விவசாயிகள், பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பவானி ஆறும், மாயாறும் சேரும் இடத்தில் கீழ்பவானி அணைக்கட்டு 1948- 55-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டு கீழ்பவானி பாசனம் மற்றும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காளிங்கராயன் வாய்க்கால் போன்ற பாசன திட்டங்களும், பிற குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றுக்கு போக, உபரியாக உள்ள தண்ணீரை பயன்படுத்துவதே அத்திக்கடவு - அவிநாசி திட்டம். ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டின் கீழே 200 மீட்டர் தள்ளி பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளில் உள்ள 74 ஏரிகள், 971 குளங்களில் நீர் நிரப்பி பாசனம் மற்றும் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டமாகும். உபரி நீர் வெளியேறும் நாட்களில், நாள் ஒன்றுக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களில் 1.5 டி.எம்.சி. நீரை திட்டத்துக்காக எடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் கோவை மாவட்டத்தில் தொடங்கி ஈரோட்டில் நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், தற்போது ஈரோட்டில் தொடங்கி கோவை மாவட்டத்தில் நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 1957-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டுவரும் இத்திட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அவிநாசியில் முதல்வர் கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தற்போது நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தால் திருப்பூர், கோவை,ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் மக்கள் வரை பயனடைவார்கள் என்றும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 34 மாதங்களுக்குள் திட்டம் முடிக்கப்படும் என்றும் பொதுப் பணித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நீர்நிலைகளில் விடப்படும் கழிவுநீர்

குடிநீருக்கும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் விரைவில் நல்ல தண்ணீர் கிடைக்கவுள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் வரும் முக்கிய நீர்நிலைகள் பலவற்றில் தனியார் நிறுவனங்கள், ஆலைகள், குடியிருப்புகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் கலந்துவருவது, இத்திட்டத்துக்காக போராடிய விவசாயிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இத்திட்டத்தின் கீழ் 160 ஏக்கர் பரப்பளவுள்ள தாமரைக் குளம், 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்கமாங்குளம் போன்றவை கழிவுநீர் தேங்கும் இடங்களாக மாறி வருகின்றன.

இது தொடர்பாக அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.வேலுசாமி கூறும்போது, ‘திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தாமரைக்குளம், சங்கமாங்குளம், புதுப்பாளையம், கானூர், நடுவச்சேரி, அசநல்லிபாளையம், தண்டுக்காரம் பாளையம், தாளக்கரை உள்ளிட்ட குளங்கள், ஏராளமான குட்டைகள் பயன்பெறவுள்ளன.

இதில் சங்கமாங்குளம், தாமரைக்குளங்களில் தற்போது கழிவுநீர் பெருமளவில் விடப்பட்டு வருகிறது. சங்கமாங்குளத்தில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தங்கியுள்ள விடுதி ஆகியவற்றிலிருந்து வெளியாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் கலந்து வருகிறது. நிறுவனத்திலிருந்து பின்புற சுற்றுச்சுவர் வழியாக வெளியேறும் கழிவுநீர், தனியார் பட்டா நிலம் வழியாக குளத்துக்கு செல்கிறது.

இதே போல அவிநாசியின் குடியிருப்பு பகுதியில் சேகரமாகும் கழிவுநீரும் குளத்திற்குள்ளேயே விடப்படுகிறது. மற்றொரு புறத்தில் பொதுமக்களுக்கான கழிப்பிடம் கட்டப்பட்டு, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரும் குளத்திற்குள் விடப்படுகிறது. இதனால் குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியானது கழிவுநீர் தேங்கி மாசடைந்து வருகிறது. கால்நடைகள் மேய்ந்த பகுதிகளில் எல்லாம் தற்போது கழிவுநீர் நிறைந்துள்ளது. அந்த நீரைக் குடித்தால் நிச்சயம் கால்நடைகளுக்கும் பாதிப்புதான். தாமரைக் குளத்தின் ஒரு பகுதியில் உள்ள நீர்வழித்தடத்தில் ஆட்டையம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் ஆகியவை சேர்ந்து குளத்துக்கு செல்கின்றன.

இதே நிலை நீடித்தால் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் நீர் கொண்டுவந்து தண்ணீர் நிரப்பினாலும் நன்மை கிடைக்காது. அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். ஆனால் நீர்நிலைகளை பாழ்படுத்தி
விட்டு தண்ணீரைக் கொண்டு வந்து என்ன பயன்?

பொதுப் பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 60 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு தண்ணீர் கிடைக்கும்போது, அதை சரியாக பயன்படுத்த வேண்டும். 3 மாவட்டங்களிலும் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை அரசும், அதிகாரிகளும் தடுக்க வேண்டும்’ என்றார்.

சுத்திகரிக்க திட்டங்கள் அவசியம்

சமீபத்தில் சங்கமாங்குளத்தை தூர்வார குளம் காக்கும் அமைப்பினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குளத்தில் உள்ள சீமைக்கருவேல முட்கள் அகற்றப்பட்டன. இப்பணியை மேற்கொள்ள குளத்தில் உள்ள கழிவுநீர் மிகப்பெரும் தடையாக இருந்ததாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

சமூக ஆர்வலர் தொரவலூர் சம்பத்குமார் கூறும் போது, ‘நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் விடப்படும் கழிவுநீரைத் தடுத்து சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றார்.

பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க பொதுப் பணித் துறையிடம் இதுவரை எந்த திட்டமும் இல்லை. மத்திய அரசு திட்டத்தின் கீழ் உள்ளாட்சித் துறையினரிடம் திட்டங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x