Last Updated : 16 Oct, 2019 10:33 AM

 

Published : 16 Oct 2019 10:33 AM
Last Updated : 16 Oct 2019 10:33 AM

சீமானின் கோபம் சரியே; ஆனால் பேச்சில் எச்சரிக்கை தேவை: தொல்.திருமாவளவன் பேட்டி

தூத்துக்குடி

சீமானின் கோபம் நியாயமானதே; ஆனால், விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, பிரச்சாரம் செய்வதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

''நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இரு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.

ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள், ஒப்புக் கொண்டதில்லை. அதேபோல இந்திய அரசாங்கத்தை அல்லது காங்கிரஸ் கட்சியை, மாவீரர் நாள் கூட்டங்களில் ஒருபோதும் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை. ராஜீவ் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கெனவே பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தப் பழி விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களின் கருத்து. பிரபாகரனின் கருத்தும் கூட. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு அல்லது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்வது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது.

இந்திய அமைதிப்படை மீது அனைவருக்குமே அதிருப்தி உண்டு. ஐ.பி.கே.எப்.யை அனுப்பச் சொன்னதும் தமிழ்நாட்டு மக்கள், ஈழமக்கள். ஆனால் அமைதிப்படை போன பிறகு அதன் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. முதன்முதலாக இந்திய அமைதிப் படையை எதிர்த்து உயிர் பலியானவர் தோழர் மாலதி.

இந்திய அமைதிப் படையின் மீது சிங்களர்களுக்கும் கோபம் இருந்தது. தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான்.

ஆனாலும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள், பிரபாகரன் கூட ஒரு நாளும் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறியதில்லை. இந்திய அரசை பகைத்துக் கொள்ளாத ஒரு அணுகுமுறையைதான் அவர் கையாண்டார்.

மணல் கொள்ளை அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மணல் மாஃபியா கும்பலின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதை எதிர்த்து மக்களோடு இணைந்து போராடிய விடுதலைச் சிறுத்தைகள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது’’.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x