Published : 15 Oct 2019 10:09 AM
Last Updated : 15 Oct 2019 10:09 AM

மருத்துவ செலவுக்காக காத்திருக்கும் காவலர்கள்

எம்.நாகராஜன்

தமிழக காவல்துறையில் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் நிலை வரை பணிபுரிவோரின் நலனுக்காக, 1957-ம் ஆண்டு முதல் காவலர் நல நிதியம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, காவலர்களின் பங்களிப்புத் தொகையை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இயங்குகிறது. காவலர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால், அதற்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். உயர் அறுவை சிகிச்சைகளுக்கென நிதி உதவி அளிக்கப்படுகிறது.

காவலரின் குழந்தைகள் உயர் கல்வி பயில, கல்வி உதவித்தொகையும், காவலர் இறக்க நேரிட்டால் அதற்கான நிதி உதவி, ஈமச்சடங்கு நிதி, குடும்ப உறுப்பினர் இறக்க நேரிட்டால் அதற்கான ஈமச்சடங்கு நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.
காவலரின் மகன், மகள்கள் உயர்கல்வி படித்தால், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.எஸ்சி., (அக்ரி) போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு ரூ.10,000, எம்.இ., போன்ற முதுநிலை பட்டம் படிப்பவர்களுக்கு ரூ.7,500, பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.4,000 டிப்ளமோ படிப்பவர்களுக்கு ரூ.3,500 வழங்கப்படுகிறது.

மருத்துவ செலவுத் தொகையாக ரூ.25,000, உயர் அறுவை சிகிச்சைகளுக்கு பணிக்காலத்தில் 2 முறை நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. பணியின்போது இறக்க நேரிட்டால், ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர் இறக்க நேரிட்டால் ஈமச்சடங்கு நிதியாக ரூ.15,000 வழங்கப்
படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்து 3 ஆண்டுகளாகியும் நிதி உதவி வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீஸார் சிலர் கூறும்போது, 'திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,500 போலீஸார் பணியில் உள்ளனர். காவலர் நல நிதியம் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவி கேட்டு உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் 3 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் காத்திருக்கும் அவலம் உள்ளது. இதேபோல, குடும்ப உறுப்பினர் இறந்தற்கான ஈமச் சடங்கு நிதி கேட்டும் சிலர் காத்திருக்கின்றனர். போலீஸாரிடமிருந்து மாதம் ரூ.150 வீதம் பங்குத்தொகை பெறப்பட்டுதான், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆனாலும், உரிய நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை வழங்குவதில் காலதாமதமாகிறது. இதனால், இத்திட்டத்தின் மீதான நம்பிக்கை மெல்ல, மெல்ல தளர்ந்து வருவதோடு, நேர்மையாக பணிபுரியும் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இதுகுறித்து ஆய்வு செய்து காவலர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x