

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் வடபழனி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. (கோப்புப் படம்)
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் வரை 52.55 சதவீதம் மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம், 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன.
இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப் பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. சுரங்கப் பாதை பணியை பொருத்தவரை, மாதவரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, பசுமை வழிச்சாலை, கலங்கரை விளக்கம், சேத்துப்பட்டு, பனகல் பூங்கா உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கின. பசுமைவழிச் சாலை - அடையாறு, சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை, அயனாவரம் - பெரம்பூர், பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப் பாதை பணிகள் அடுத்தடுத்து நிறைவடைந்தன.
கலங்கரை விளக்கம் - மயிலாப்பூர், ராயப்பேட்டை - ஆர்.கே.சாலை, பசுமைவழிச் சாலை - மந்தைவெளி ஆகிய சுரங்கப்பாதை பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதுதவிர, பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இதுபோல, உயர்மட்டப் பாதை பணி பொருத்தவரை, 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர்- வடபழனி தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே நேரத்தில், போரூர் - வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
வடபழனி - கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பாதையில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் உயர்மட்டப் பாதை பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக, 52.55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர்- வடபழனி தடத்தில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதையடுத்து, சென்னை வர்த்தக மையம் - போரூர் பணிகளை முடிக்க உள்ளோம். போரூர்- கோயம்பேடு ஆகிய உயர்மட்டப்பாதை பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை சேர்த்து நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 52.55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
குறிப்பாக, 3-வது வழித் தடத்தில் உயர்மட்ட பாதைப் பணிகள் 42.71 சதவீதமும், சுரங்கப் பாதை பணிகள் 45.46 சதவீதமும் நிறைவடைந்துள்ளன. 4-வது வழித் தடத்தில் 60 சதவீதத்துக்கு மேலாகவும், 5-வது வழித்தடங்களில் 50 சதவீதத்துக்கு மேலாகவும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பல இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 2 மாதங்களாக சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். தற்போது, பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர்.
மீண்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், வரும் 2027-ல் அனைத்து உயர்மட்டப்பாதை பணிகளும், 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து சுரங்கப்பாதை பணிகளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.