

சென்னை: மாநகராட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை இயக்க விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளதுஎன்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி சார்பில் தியாகராய நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி வாகன நிறுத்தத்தில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களும், தரைத்தளத்தின் கீழ் 2 தளங்களும் உள்ளன.
தரையின் கீழ் உள்ள 2 தளங்களில் 282 இருசக்கர வாகனங்களும், தரைத்தளத்துக்கு மேல் உள்ள 7-வது தளத்தில் 231 இருசக்கர வாகனங்களும் என மொத்தம் 513 இருசக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தரைத்தளத்துக்கு மேல் உள்ள 6 தளங்களில் 222 நான்குசக்கர வாகனங்களை நிறுத்த முடியும். தற்போது இந்த வாகன நிறுத்துமிடத்தின் 4-வது தளத்தில் 37 நான்கு சக்கர வாகனங்களும், தரைத்தளத்தின் கீழ் 282 இருசக்கர வாகனங்களும் எவ்வித கட்டணமும் இன்றி நிறுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இதற்கான ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த நடவடிக்கைகள் முடிவுற்ற பின்னர் உரிய கட்டணத்துடன் தரைத்தளத்துக்கு மேல் உள்ள 6 தளங்களில் 4 சக்கர வாகனங்களும், தரைத்தளத்துக்கு கீழ் உள்ள 2 தளங்கள் மற்றும் 7-வது தளத்தில் இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
பராமரிக்க நடவடிக்கை இந்த தானியங்கி வாகனம் நிறுத்தத்தை உரிய தொழில்நுட்பத்துடன் பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இப் பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி சிறப்புத் திட்டங்கள் துறை செயற் பொறியாளர் சி.ராஜு, மண்டல அலுவலர் பானுகுமார், மண்டல செயற்பொறியாளர்கள் முத்தையா, செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.