Published : 12 Oct 2019 12:17 PM
Last Updated : 12 Oct 2019 12:17 PM

தன் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காட்டாத பெரிய தலைவர் பிரதமர் மோடி: வானதி சீனிவாசன் புகழாரம்

சென்னை

தன் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காட்டாத பெரிய தலைவர் பிரதமர் மோடி என, தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியுள்ள மோடி, கடற்கரையில் இன்று (அக்.12) காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கோவளத்தில் உள்ள கடற்கரையில் பிரதமர் மோடி தனி ஆளாக பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், "தன் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காட்டாத பெரிய தலைவர் மோடி என்பதை அவர் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தன் செயலின் மூலமாக பிரதமர் மிகப்பெரிய செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

கடந்த முறை பிரதமர், சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்காக வந்திருந்தார். அப்போது கட்சியின் சார்பாக வரவேற்பு கொடுத்திருந்தோம். நிகழ்ச்சி முடிந்த பிறகு எங்களை அழைத்து, "ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பேனர்களைத் தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தினார். தொண்டர்கள் வரவேற்பையும் தாண்டி, அவர் எந்த விஷயத்தில் கவனமாக இருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும்.

பிரதமரின் ஒவ்வொரு செயலும் லட்சக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகிறது, உற்சாகப்படுத்துகிறது. பணிகளில் இறங்க வைக்கிறது, நம்மைச் சிந்திக்க வைக்கிறது’’.

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x