Published : 11 Oct 2019 07:36 AM
Last Updated : 11 Oct 2019 07:36 AM

மத்திய அரசு மானியம், சலுகைக்கு கிஸான் கார்டு கட்டாயம்: அடிப்படை கட்டமைப்பு இன்றி தாமதமாகும் இ-அடங்கல்; விவசாயிகள், விஏஓ சங்கம் கூறும் யோசனைகள் கவனிக்கப்படுமா?

டி.செல்வகுமார் 

சென்னை

நிலவுடமைப் பதிவேட்டை மறு வகைப்படுத்துவதற்கு தேவையான லேப்-டாப், இணையதள வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லா ததால் இ-அடங்கல் வழங்க தாம தம் ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு, அனைத்து பரி வர்த்தனைகளும் இணையதளம் மூலமாக நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன் படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பெறவும், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும் இ-அடங் கல் அவசியம். இதற்கு விவசாயி களின் பெயர், நிலப்பரப்பு, நிலத் தின் தன்மை, சாகுபடி செய்யப்படும் பயிர் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட நிலவுடமைப் பதி வேட்டை மறுவகைப்படுத்த (புதுப் பிக்க) வேண்டும். அதைக் கணினி யில் பதிவேற்றம் செய்தால்தான் இ-அடங்கல் வழங்க முடியும்.

நிலவுடமைப் பதிவேடு 1984-ம் ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கப் படவில்லை. அதனால் இ-அடங்கல் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக விவசாயத்துக்கு தேவையான உரம் பெறுவதற்கு ஆதார் அட்டையை காண்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

இ-அடங்கல் வரவேற்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், தமிழகத்தில் 60 சதவீத நிலங்கள் கோயில்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமா னவை. அந்த நிலங்களைப் பண் படுத்தி 100 ஆண்டுகளாக விவசாயி கள் சாகுபடி செய்து வருகின்றனர். திடீரென அந்த நிலங்களுக்கு கணினி மூலம்தான் சிட்டா, அடங்கல் சான்று பெற வேண்டும் என்று சொல்வதால்தான் பிரச்சினை எழுந்துள்ளது.

முன்பெல்லாம் கிராமங்களில் பட்டா மணியம், கிராம கணக்குப் பிள்ளைகள் இருந்தனர். அங்குள்ள நிலங்கள் யார், யாருக்கு சொந்தம் என்பதை அவர்கள் விரல்நுனியில் வைத்திருந்தனர். நிலம் தொடர் பான கணக்குகளையும் பார்த்து வந்தனர். அதன்பிறகு கிராம நிர் வாக அலுவலர் என்ற புதிய பணி உருவாக்கப்பட்ட பிறகும், பட்டா மணியம், கிராம கணக்குப் பிள்ளையைத்தான் அவர்கள் நம்பி கணக்கு பார்த்து வந்தனர். பின்னர் அந்த நடைமுறை மாறி, நிலங் கள் மறுஅளவீடுகள் செய்யப் பட்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டன. 1984-ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிலவுடமைப் பதிவேடுகளை (ஏ-ரிஜிஸ்டர்) வகைப்படுத்தினர். அதன்பிறகு நிலங்கள் மறு வகைப்படுத்தப்பட வில்லை.

மத்திய கிஸான் கார்டு இருந் தால்தான் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட் டுறவு வங்கிகளில் கடன் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-அடங்கல் இருந்தால்தான் கிஸான் கார்டு பெற முடியும். கணினி மூலம் இ-அடங்கல் வழங்க வேண்டுமானால், நில வுடமைப் பதிவேட்டை முறையாகப் பராமரித்திருக்க வேண்டும். அத னால், தற்போது உரம் வாங்கு வதற்கு ஆதார் அட்டையைக் காண்பித்து வாங்க வேண்டிய கட் டாயம் உருவாகியுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக நில வுடமைப் பதிவேடுகளை, நில அமைப்புகளை மறுவகைப்படுத்த போர்க்கால அடிப்படையில் சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் இரா.போஸ் கூறிய தாவது:கிராம நிர்வாக அலுவலர் கள் அனைவரிடமும் லேப்-டாப், இணையதள வசதி இல்லை. ஏரா ளமான கிராமங்களில் இ-சேவை மையத்துக்கான கட்டிடம் கட்டி பயன்படுத்தப்படாமல் உள்ளன. கிராம நிர்வாக அலுவலரிடம், இ-சேவை மையத்தை ஒப்படைத் தால் இ-அடங்கல் வழங்கும் பணியை விரைவுபடுத்த முடியும். விவசாயிகள் தங்கள் நிலத்தில் என்ன பயிரிடப்பட்டுள்ளது என்பதை செல்போனில் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட விஏஓ-வுக்கு அனுப்ப வேண்டும். அவர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் வரை தகவலைக் கொண்டு சென்று அனுமதி பெற வேண்டும். அனைவரி டமும் அனுமதி கிடைத்த பிறகுதான் இ-அடங்கல் வழங்கப்படும். இந்த நடைமுறையால் இ-அடங்கல் பெறுவதற்கு நீண்ட காலமாகும். இ-அடங்கல் வழங்கும் வரை, கையடங்கல் வழங்குங்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு இ-அடங்கல் அவசியம். பெரும் பாலான கிராமங்களில் உள்ள நிலத் தின் பட்டா கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அதனால், விஏஓவிடம் செல்லாமலே, ஒருவர் தனது பட்டாவை கணினி மூலம் பெற முடியும். அதுபோல, கூட்டுப் பட்டாக்களைப் பிரித்து தனித்தனி பட்டாவாக உருவாக்குவது, தற் போது சாகுபடி செய்பவரின் பெய ரில் நிலவுடமைப் பதிவேட்டை புதுப்பிப்பது ஆகியவற்றைச் செய்ய சிறப்பு திட்டம் தேவை யாகிறது. இவ்வாறு இரா.போஸ் கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர் சங்க செய்தித் தொடர்பாளர் ஆர்.அருள் ராஜ் கூறும்போது, "நிலவுடமை பதிவேட்டை 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுவகை செய்ய வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி பார்த்தால் 2015-ம் ஆண்டு மறுவகை செய்திருக்க வேண்டும். இந்நிலையில், ‘தமிழ் நிலம்’ என்ற இணையதளத்தின் மூலம் நிலத்தை மறுவகை செய் யும்போது விஏஓ.களை அழைத்து அதைச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ மூலமாகச் செய்துள்ளனர். அதனால்தான் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத் துக்கும் மேற்பட்ட விஏஓ-களில் சுமார் 5 ஆயிரம் பேருக்குத்தான் லேப்-டாப் வழங்கியுள்ளனர். இ-அடங்கல் வழங்க மாவட்ட வரு வாய் அலுவலர் வரை பல கட்ட மாக அனுமதி பெற வேண்டிய திருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. இதற்குப் பதிலாக இ-அடங்கல் வழங்குவதற்கான அதிகாரத்தை விஏஓ-விடமே கொடுத்துவிட்டால், இ-அடங்கல் வழங்கும் பணியை விரைவாக முடிக்க முடியும். தவறு செய்தால் சம்பந்தப்பட்ட விஏஓ-வை கடுமையாகத் தண்டிக்கவும் வழிவகை செய்யலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x