Published : 09 Oct 2019 07:58 PM
Last Updated : 09 Oct 2019 07:58 PM

மின்சாரப் பேருந்து இயக்கத்தை தனியார்வசம் கொடுக்கும் முடிவு; போக்குவரத்துக் கழகங்களை சீரழிக்கும் நடவடிக்கை: சிஐடியூ எச்சரிக்கை 

சென்னை

போக்குவரத்து வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பதற்கான மாற்று ஏற்பாடாகவே மின்சாரப் பேருந்தை கருத வேண்டியுள்ளது என சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியூ போக்குவரத்து தொழிற்சங்க சம்மேளனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழகத்தில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. பேருந்து கொள்முதல், பேருந்து பராமரிப்பு, சார்ஜிங் சென்டர்கள், ஓட்டுநர் உட்பட அனைத்தையும் ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நடத்துநர் அனுப்பப்படுவார் அல்லது நடத்துநர் இல்லாமல் டிக்கெட், மெஷின்கள் மூலம் கொடுக்கப்படும். இதில் வசூலாகும் பணத்தை போக்குவரத்துக் கழகங்களிடம் பேருந்தை இயக்கும் தனியார் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்கள் ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிர்ணயிக்கப்படும் தொகையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் என ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் 5 லட்சம் முதல் 7 லட்சம் கிலோ மீட்டர் வரை பேருந்தை இயக்க வேண்டும். அப்படி ஐந்து ஆண்டு முதல் ஏழாண்டு காலம் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் பேருந்தை இயக்க தனியார் நிறுவனங்களை அரசு அழைத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்கவே பயன்படும்.

1972 ஆம் ஆண்டு 3000 பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் தற்போது தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகளை இயக்குகின்றன. இவற்றில் சுமார் 10,000 பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகிறது. லாபம் இல்லை என்று தெரிந்தும் சேவை நோக்கத்தோடு கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி போக்குவரத்துக் கழகங்கங்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர 30 லட்சம் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவசப் பயணம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பான இயக்கத்துக்கான பல விருதுகளையும் பெற்று வருகின்றன. தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்துக் கழகங்களின் பங்கு அளப்பரியது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே சிஐடியு உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.

மின்சாரப் பேருந்து இயக்கம் பலனளிக்காது

சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றுக் கூறி மின்சாரப் பேருந்துகளை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. மாசு கட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மினி பஸ் உட்பட மொத்தம் 34 ஆயிரம் வாகனங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு இயங்குகின்றன.

இதைத் தவிர தமிழகத்தில் பொதுப் பயன்பாட்டிற்கான ஆட்டோ, லாரி, சரக்கு வாகனங்கள், டாக்ஸிகள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உட்பட இவை அனைத்தின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் அளவிற்கு இயங்குகின்றன. மேலும் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என 3 கோடி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுப் போக்குவரத்தை பலப்படுத்தவேண்டும். இந்தியாவில் மின்சாரப் பேருந்து தயாரிப்பு என்பது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பகுதி மின்சார வாகனங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்படி நான்கில் ஒரு வாகனத்தின் விலை சுமார் 2 கோடி ரூபாய். மேலும் பேருந்து பராமரிப்புக்கு டீசல் இன்ஜினை விட கூடுதல் செலவு பிடிக்கும்.

இப்படித் தயாராகும் பேருந்துகளை தனியார் யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் சிறு தொகையை மட்டும் ஊக்கத் தொகையாக கொடுத்து போக்குவரத்துக் கழகங்கள் இயக்க செலவை ஏற்றுக் கொள்ளும் அடிப்படையில் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இத்திட்டம் போக்குவரத்துக் கழகங்களுக்கு மேலும் நிதிச்சுமையை உருவாக்கவே செய்யும்.

மின்சாரப் பேருந்துகளில் குறைந்த பயணிகளையே ஏற்ற முடியும். தற்போதைய பயணக் கட்டணத்தில் பேருந்து இயக்க முடியாது எனக் கருதுகிறோம். தமிழக அரசு ஜனவரி 2018 முதல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய நிலையில் சுமார் 25 லட்சம் பயணிகள் நாளொன்றுக்கு பயணத்தைத் தவிர்த்துள்ளனர். சென்னையில் 30 ஆயிரம் கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் பயணிகள் கூடுதலாகச் செல்லாமல் இருப்பதற்கு அதிக கட்டணமே காரணம் ஆகும்.

எனவே மின்சாரப் பேருந்து மூலம் ஏற்படும் இழப்பை தலையில் சுமத்தி கழகங்களைச் சீரழிக்கவே இத்திட்டம் பயன்படும். அத்துடன் போக்குவரத்து வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பதற்கான மாற்று ஏற்பாடாகவே மின்சாரப் பேருந்தை கருத வேண்டியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக அரசு 50 சதவீத வழித்தடங்களை தனியாருக்கு வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு உருவானது. நீதிமன்றம் தடை விதித்தது.

2003-க்குப்பின் கடந்த 15 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சிகளின்போது போக்குவரத்தை தனியார் மயமாக்க மாட்டோம் என மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது. லாப நோக்கத்தோடு இயக்கப்படவில்லை சேவை நோக்கத்தோடே இயக்கப்படுகின்றன என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நிலையில் 525 வழித்தடங்களில் மின்சாரப் பேருந்து இயக்குவதாகக் கூறும் தமிழக அரசு அவை புது வழித்தடங்களா, ஏற்கெனவே இருக்கும் வழித்தடங்களா என்பதை தெளிவுபடுத்தவில்லை. பழைய வழித்தடங்கள் எனில் கொள்ளளவு குறைவான மின்சாரப் பேருந்துகளால் எப்படி பயணத்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்?

மின்சாரப் பேருந்து இயக்கம் போக்குவரத்துக் கழகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ உடனடியாக எவ்வித பலனும் தராது. மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணச்சேவையை அளித்து வரும் போக்குவரத்துக் கழகங்களை தனியார் பெருமுதலாளிகள் கபளிகரம் செய்யவே பயன்படும்.

ஏற்கெனவே ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் சதித் திட்டத்தை மாநில அரசு அமலாக்கக்கூடாது. போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்கி தமிழக மக்களுக்கு மேலும் பலன் பெறும் அடிப்படையில் இப்பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டும் என சிஐடியூ தமிழக அரசை வற்புறுத்துகிறது”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x