Published : 09 Oct 2019 12:17 PM
Last Updated : 09 Oct 2019 12:17 PM

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (அக்.9) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு விவசாய நிலங்களை, நீர் ஆதாரத்தை, சுற்றுப்புறச்சூழலை, மனித உயிரைப் பாதிக்கின்ற வகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும், எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கும் மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

இந்த ஓராண்டில் காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்காக ஓஎன்ஜிசி 489 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்ததில் பெருமளவுக்கு அனுமதியும் பெற்றுவிட்டது.

கடந்த செப்டம்பர் 25 அன்று ஓஎன்ஜிசியின் சென்னை அலுவலகம் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் காவிரிப் படுகையில் கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 20 புதிய எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஆய்வு செய்வதற்கான அனுமதியைக் கோரியது. இக்கிணறுகள் சுமார் 3,500 மீட்டர் முதல் 5 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்படும்.

இப்படி 5 ஆயிரம் மீட்டர் வரை ஆழப்படுத்தி எண்ணெய்க் கிணறுகளை அமைத்தால் அந்த பகுதி விளைநிலங்கள், நீர் ஆதாரம், சுற்றுச்சூழல், மனித உடல்நலன் பாதிக்கப்படும். மேலும் விளைநிலங்களை நம்பி இருக்கும் விவசாயிகளும் விவசாயக்கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

குறிப்பாக தனியாரோ, பொதுத்துறையோ ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விளைநிலங்களை கையகப்படுத்தவும், அதன் மூலம் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கவும் மக்களிடம் நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏதேனும் உதவிகள் செய்து நிலத்தை அபகரிக்க நினைத்தால் பொதுமக்கள் ஏமாற மாட்டார்கள்.

எனவே, மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அனுமதி அளிக்கக்கூடாது. தமிழக அரசு டெல்டா மாவட்ட விளைநிலங்களின் முழுமையான அவசியமான பயன்பாட்டைக் கவனத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க உரிய நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுத்து விவசாயிகளையும், விவசாயக் கூலித்தொழிலாளர்களையும், அனைத்துத் தரப்பு மக்களுக்குமான விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x