Published : 08 Oct 2019 10:21 AM
Last Updated : 08 Oct 2019 10:21 AM

நான் சொன்னதை ஜெகன்மோகன் ரெட்டி செய்கிறார்: சீமான்

நாங்குநேரி

நான் சொன்னதைத்தான் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செய்கிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதியும் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்த குமார் எம்.பி. ஆனதால் அவர் ராஜினாமா செய்த நாங்குநேரி தொகுதியும் காலியாக இருக்கிறது. இந்த 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் ஆளும் அதிமுக போட்டியிடுகிறது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

அமமுகவும் மக்கள் நீதி மய்யமும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாங்குநேரில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''உலக வரலாற்றிலேயே பொழுதுபோக்குக்கும் கேளிக்கைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த இனம் தமிழினம்தான். நல்லகண்ணுவைத் தோற்கடித்துவிட்டு, ரஜினியை ஜெயிக்க வைக்க நினைக்கும் கூட்டத்தை என்ன செய்யமுடியும்?

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சினிமா இல்லையா, எதற்காக ரஜினியை வாருங்கள், வாருங்கள் என்கிறீர்கள்? மக்களுக்கான தலைவரை தரையில் தேடுங்கள்; திரையில் தேடாதீர்கள்.

என்னுடைய தம்பி, தங்கைகள் பயணமாக கேரளா சென்று வரவேண்டும். அங்கே மரங்கள் இல்லாத இடத்தையே பார்க்கமுடியாது. ஆனால், இங்கே பொட்டல் காடுகளாக மாறிவிட்டன. நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒருபங்கு, அதாவது 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் 13 சதவீதம் மட்டுமே இருக்கின்றன.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் நான் சொன்னதைத்தான் ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்கிறார். காவலர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி காவலர்களுக்கு விடுமுறை கொடுத்து அதை செயல்படுத்தியுள்ளார். என்னுடைய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார் போல.

எங்களிடம் காசில்லை; எங்களைக் காட்டுவதற்கு ஊடகம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். எனக்கென்று உள்ள தம்பி, தங்கைகளை நம்பித்தான் பேசுகிறேன்.

நாங்கள் தேர்தலைத் தேர்தலாக மட்டுமே பார்க்கவில்லை. மாறுதலாகவே பார்க்கிறோம். அதனால்தான் நிறையக் கட்சிகள் போட்டியிடாதபோதும் நாங்கள் போட்டியிடுகிறோம்'' என்று சீமான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x