Published : 07 Oct 2019 01:14 PM
Last Updated : 07 Oct 2019 01:14 PM

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை

மின் கட்டண உயர்வை தமிழக அரசு, திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக மோட்டார் வாகனத் தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டு லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த உறுதியான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் விலைவாசி உயர்ந்து கொண்டே உள்ளது. வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு உள்ளிட்ட பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. அண்மையில் சமையல் எரிவாயு விலை திடீர் என ரூ.13.50 உயர்த்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்டுக்குள் வைக்கப்பட்ட பெட்ரோல் - டீசல் விலை தேர்தல் முடிவிற்குப் பின்னர் தினந்தோறும் பவுன் விலைபோல் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதன் விளைவாக அத்தியாவசியப் பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் போட்டிபோட்டு உயர்ந்துகொண்டே சென்றது. பால் உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் விலை என்ற பெயரால் ஒரு லிட்டர் பால், எருமை - பசும்பால் என்று வேறுபாடு இன்றி லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி பொதுமக்களை அரசு வஞ்சித்தது. இத்தகைய நெருக்கடிகளை மத்திய- மாநில ஆகிய இரு அரசுகளும் மக்களுக்குத் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுப்பது போதாது என்று, தற்போது தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

கட்டண உயர்வு குறித்து மின்வாரியம் இணையதளத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எல்.டி.சர்வீஸ் (தாழ்வு அழுத்த மின் இணைப்பு) வீடுகளுக்கு சிங்கில் பேஸ் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.250 என்பது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 பேஸ் இணைப்பு கட்டணம் ரூ.500 என்பது ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுக் குடிநீர் இணைப்பு, பொதுப் பயன்பாட்டிற்கான விளக்குகளுக்கு ரூ.250 என்பது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே பிரிவில் 3 பேஸ் இணைப்பிற்கு ரூ.500 என்பது ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், கைத்தறி மற்றும் தொழில்களுக்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கட்டணம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளன. குடிசைத் தொழில், விசைத்தறித் தொழிற்சாலை என அனைத்து மின் கட்டணங்களும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரிக்கும் மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x