Published : 07 Oct 2019 10:12 AM
Last Updated : 07 Oct 2019 10:12 AM

பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்: பூக்கள் விலை கடும் உயர்வு 

தூத்துக்குடி/ திருநெல்வேலி

நாடு மு.ழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பணி தளங்களிலும் பூஜைகள் நடத்தப்படும். மேலும், வாகனங்களுக்கும் பூஜைகள் நடத்தப்படும். பூஜையின்போது வாழைக்கன்று, மாவிலை கட்டப்படும். அரிசி பொரி, சுண்டல் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.

தூத்துக்குடியில் வாழைக்கன்று, மாவிலை, பொரி போன்ற ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காமராஜ் காய்கறி மார்க்கெட், வஉசி மார்க்கெட் பகுதிகளில் வாழைக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

வைகுண்டம், ஏரல், சாயர்புரம், குலையன்கரிசல், குரும்பூர், ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழைக்கன்றுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வறட்சி காரணமாக வாழைக்கன்றுகளின் வரத்து குறைவாக இருந்தது. இதனால் விலை கடந்த ஆண்டைவிட சற்று உயர்ந்து காணப்பட்டது. ஒரு வாழைக்கன்று ரூ.10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டது. மாவிலை சிறிய கட்டு ரூ.10-க்கு விற்கப்பட்டது. தென்னை ஓலையால் செய்யப்பட்ட அலங்காரம் 5 ஓலைகள் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்பட்டன. வாழைத்தார், வாழை இலை விலையும் உயர்ந்து காணப்பட்டது. அரிசி பொரி, பொரிகடலை, சுண்டல் போன்ற பொருட்களின் விலை உயர்ந்திருந்த போதிலும், விற்பனையில் சுணக்கம் இல்லை.

பூ விலை உயர்வு

தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்த போதிலும் பூக்கள் வாங்க மக்கள் அலைமோதினர். மல்லிப் பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம் ஆகியவை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் கலர் பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கு விற்பனையானது. அரளிப் பூ, சாமந்தி போன்றவை கிலோ ரூ.500-க்கும், சென்ட் பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது. கடந்த இரு தினங்களுக்கு முன் இருந்ததை விட, பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் திருச்செந்தூர், வைகுண்டம், ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டத் தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பூஜை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி நயினார்குளம், பாவூர்சத்திரம் காய்கறி சந்தைகள் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள உழவர் சந்தைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் ஆகியவற்றில் நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. வரத்து குறைவாக இருந்ததால் காய்கறிகள், பூக்கள், பழ வகைகள் விலை அதிகரித்து இருந்தது.

காய்- கனிகள்

பாளையங்கோட்டை சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று 50 ஆக உயர்ந்தது. ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளிப்பழம் 40 ஆகவும், ஒரு எண்ணம் ரூ.5-க்கு விற்ற வாழைக்காய் 7 ஆகவும், ரூ.60-க்கு விற்ற பீன்ஸ் ரூ.80 ஆகவும் உயர்ந்தது.

அவரைக்காய் ரூ. 20 அதிகரித்து 80-க்கும், உருளைக்கிழங்கு ரூ.10 அதிகரித்து 35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் விலையில் மாற்றமின்றி ரூ.50-க்கு விற்கப்பட்டது.

இதேபோல், பழ வகைகளும் ரூ.20 முதல் 40 வரை விலை உயர்ந்தது. ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.150, திராட்சை ரூ.100, ஆரஞ்சு ரூ.120, கொய்யா ரூ.140-க்கு விற்பனையானது.

நிலையில் தொங்க விடும் மாலை ரூ.500, சிறிய மாலை ரூ.200, சம்பங்கி மாலை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் பொரி ரூ.10 , அவல் ரூ.40, பொரிகடலை ரூ.80-க்கு விற்கப்பட்டது.

ஒரு ஜோடி சிறிய வாழைக்கன்று ரூ.20-க்கும், 200 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு வாழை இலை 450 முதல் 600 ரூபாய்க்கும், 5 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு இலை 10 முதல் 20 ரூபாய் வரையும் விற்பனையானது.

பழங்கள், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்டவைகளின் விலை இன்று மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x