Published : 06 Oct 2019 08:36 AM
Last Updated : 06 Oct 2019 08:36 AM

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு: அக்டோபர் இறுதியில் நடைபெறும் என தகவல்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாத இறுதியில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே ஆசிரியர் பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். ஆனால், பல்வேறு காரணங்களால் நடப்பு கல்வி ஆண்டு கலந்தாய்வை கடந்த ஜூலை மாதம் நடத்த முடிவு செய்து வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிவிப்பை கல்வித் துறை வெளியிட்டது. அதில் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே இடமாறுதல் தரப்படும் என்ற விதியை தளர்த்தக் கோரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளின் விசாரணையால் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு கலந்தாய்வை உடனே நடத்த வேண்டுமென பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று இந்த மாத இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருத்தப்பட்ட புதிய அறிவிப் பாணையை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்படும் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x