Last Updated : 28 Jul, 2015 10:30 AM

 

Published : 28 Jul 2015 10:30 AM
Last Updated : 28 Jul 2015 10:30 AM

எங்கள் தொழுகையின் பலன் அனைத்தும் அவர்களுக்கே இறைவன் அருளட்டும் - ‘தி இந்து’ வாசகர்களின் உதவியால் மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி

‘‘நாங்கள் இதுநாள் வரை செய்த தொழுகையின் பலனை எல்லாம், எங்களுக்கு உதவியவர்களுக்கே அல்லா அருளட்டும்’’ என்று மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மதுரை கரும்பாலை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருக்கு மனைவி மைதீன் பாத்திமா மற்றும் செய்யது அலி பாத்திமா, சுல்தான் அலாவு தீன்(36), கதிஜா பானு(30) ஆகிய 3 பிள்ளைகள். மூன்று பேருமே மாற்றுத்திறனாளிகள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முகமது இஸ்மாயில் இறந்துவிட்டார். அதே கவலையில் அடுத்த 2 ஆண்டுகளில் மனைவி மைதீன் பாத்திமாவும் இறந்து விட்டார். தம்பி, தங்கையை அரவணைத்து வந்த செய்யது அலி பாத்திமாவும் ஓராண்டுக்கு முன்பு இறந்ததால் மற்ற இருவரும் நிற்கதியானார்கள்.

பெற்றோரையும், சகோதரியை யும் இழந்த சுல்தான் அலாவுதீன், கதிஜா பானு இருவரும் தற்போது தங்களது தாய்மாமா ஷேக் மதார் பராமரிப்பில் உள்ளனர். மூன்று சக்கர சைக்கிள் தொழிலாளியான அவர் இருவரையும் பராமரிக்க சிரமப்படுவது குறித்து கடந்த 18-ம் தேதி ‘தி இந்து’நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து `தி இந்து’ வாசகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நூறு ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு உதவி செய் துள்ளனர்.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய கதிஜா பானு, “தாய், தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு உதவி செஞ்சவுகளுக்கு அல்லா ஒரு குறையும் வைக்க மாட்டார். நாங்கள் இதுநாள் வரை செய்த தொழுகையின் பலனை எல்லாம் அல்லா அவர்களுக்கே அருளட்டும்”என்றார்.

தாய்மாமா ஷேக் மதார் கூறியதாவது:

“என் ஆயுசுக்குப் பிறகு, இப் பிள்ளைகளை யார் பார்த்துப்பா? மாப்ளை இருந்தா சொல்லுங்கன்னு எனக்குத் தெரிஞ்ச இடங்களில் எல்லாம் சொல்லி வெச்சிருந்தேன். எல்லாம் 40 பவுன், 50 பவுன் கேட்கிறாக. அவ்வளவு வசதி எங்க கிட்ட இல்லை. அந்தப் பொண்ணு பேர்ல ஏதாவது சொத்து இருந்தா கல்யாணத்துக்கு உதவியா இருக்கு மேன்னுதான் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். `தி இந்து’ தமிழ் பத்திரிகையில் செய்தி வந்த பிறகு, நிறைய பேர் உதவி செஞ்சாங்க. இதுவரை நேரடியாகவும், வங்கி மூலமாகவும் 45 ஆயிரம் பணம் வந்திருக்கு.

‘கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம்’ன்னு `தி இந்து’ வாசகர்கள் சொன்ன வார்த்தை களாலதான், இப்பொண்ணுக்கு எப்படியும் கல்யாணம் நடத்தி டலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கு.

இப்போதைக்கு காது, மூக்கு, கால்ல போட்டுக்க சின்னதா நகை இருக்கு. வாசகர்கள் புண்ணியத்தால, 50 ஆயிரம் ரொக்கமும் இருக்கு. அந்தப் பொண்ணு குழந்தை மாதிரி. அதுக்கு பிறந்த வீடுன்னு ஒண்ணு கிடையாதுங்கிறத மனசுல வெச்சி, கடைசி வரைக்கும் வச்சிக்காப்பாத்துற மாப்பிள்ளை அமைஞ்சா என் கடமை முடிஞ் சிரும்” என்றார் கண்கலங்கியபடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x