Published : 03 Oct 2019 09:25 PM
Last Updated : 03 Oct 2019 09:25 PM

வாகன ஓட்டிகளைவிட பெட்ரோல் டாங்குகள்தான் ஹெல்மெட் அணிகின்றன : உயர் நீதிமன்றம் விமர்சனம்

சென்னை

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் கடந்த ஆண்டைவிட 91 சதவீதம் அதிகரித்துள்ளது, உயிரிழப்பும் குறைந்துள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி கே.கே. ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். தொடர்ந்து விசாரணையில் உள்ள இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ ஜி சாம்சன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகம் முழுதும் கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக 22.65 லட்சம் நபர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் நிலவரப்படி 43.31 லட்சம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு எண்ணிக்கை 20 லட்சம் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 91 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை, ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை, 222 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்ததவர்கள் எண்ணிக்கை 4337 ஆகவும் இருந்த நிலையில், 2019 ஆகஸ்ட்டை பொறுத்த வரை ஹெல்மெட் அணிந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3376 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, இருசக்கர வாகன விபத்தால் ஏற்பட்ட இறப்பு விகிதம் கடந்தாண்டு ஆகஸ்ட வரை 4457 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3677 ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் வாகன விதிகளை கண்டிப்புடன் அமல்ப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் 8477 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பனை வெளியிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி எழுத்து தேர்வுகள் முடிந்துள்ளதாகவும், அனைத்து நடைமுறையும் முடிந்த பின்னர் இவ்வாண்டே 969 உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது நீதிபதிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளை விட பெட்ரொல் டேங்குகள் தான் அதிகமாக ஹெல்மெட் அணிவதாக தெரிவித்தனர். வட சென்னையில் ஜிஏ சாலை, பிராட்வே, பேசின் பிரிட்ஜ் சாலை போன்ற இடங்களில் ஹெல்மெட் சோதனை முறையாக நடைபெறுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதேபோல, ஹெல்மெட் வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் பேசுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பார்த்துகொள்வார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஸ்விக்கியில் பணிபுரிபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்கள் சாலையில் தவறான வழியில் அதிகளவில் வாகனத்தை ஓட்டுவதாகவும் சாடினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்த அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x