Published : 03 Oct 2019 10:45 AM
Last Updated : 03 Oct 2019 10:45 AM

பணத்தை நம்பி தேர்தலை சந்திக்கும் அதிமுக: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

தூத்துக்குடி

பணத்தை நம்பி அதிமுகவினர் தேர்தலை சந்திப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக வினர் எப்போதும் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கக்கூடியவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்தை மட்டுமே வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்பது நிச்சயம் நடக்காது. மக்கள் விழிப்போடு இருக்கின்றனர். அதிமுக ஆட்சியின் அவலத்தை நன்கு உணர்ந்துள்ளனர்.

எனவே, இடைத்தேர்தலில் அவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்காது.

தமிழகத்துக்கு எதிராக எந்த திட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதனை ஏற்றுக் கொண்டு அதிமுகவினரும் தமிழகத்துக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொண்டு தான் கடந்த மக்களவை தேர்தலிலும், அப்போது நடந்த இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர்.

திமுக எந்த தவறான வாக்குறுதி களையும் மக்களிடம் கூறி வெற்றி பெறவில்லை. சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது தான் கருணாநிதியின் தாரக மந்திரம். அதை தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடைபிடித்து வருகிறார். நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றார் அவர்.

பணம் கொடுத்து வெற்றிபெற்றவர் கனிமொழி: அமைச்சர் விமர்சனம்

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவர் கனிமொழி என, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக பணத்தை நம்பி தேர்தலை சந்திப்பதாக கனிமொழி கூறியிருப்பது தவறு. அவர்கள் தான் அப்படி பழகியவர்கள். அவர்களது பழக்கத்தை எங்கள் மீது கூறுகிறார்கள். கடந்த மக்களவை தேர்தலில் யார் பணம் கொடுத்தார்கள் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தெரியும். பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றதாக கனிமொழியால் கூற முடியுமா?. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து பெற்ற வெற்றி தான், கனிமொழியின் வெற்றி. அவர் மற்றவர்களை பற்றி கூறுவது பொருத்தமாக இருக்காது. நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெறும்.

தாமிரபரணி- கருமேனி- நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு மூன்றாம் கட்டமாக ரூ.800 கோடியை முதல்வர் பழனிசாமி ஒதுக்கீடு செய்து, பணிகள் தற்போது முடியும் நிலையில் உள்ளன. 4-ம் கட்டமாக பணிகள் நிறைவடையும் போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயனடையும். இதுபோல் ஒரு திட்டத்தை செயல்படுத்தியதாக ஸ்டாலின், கனிமொழியால் சொல்ல முடியுமா?. எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல், திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வருவதை பார்த்து, காழ்ப்புணர்ச்சியில் கனிமொழி பேசுகிறார் என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x