Published : 01 Oct 2019 11:52 AM
Last Updated : 01 Oct 2019 11:52 AM

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் முழங்கவிருக்கும் மதுரை மாணவியின் குரல்

மதுரை

மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று (அக்.1), பள்ளிக்கூடங்களில் மனித உரிமைகள் பாடம் கற்பிப்பதின் அவசியம் குறித்து ஐ.நா.வில் முழங்கவிருக்கிறார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில்தான் மாணவி பிரேமலதா பேசவிருக்கிறார்.

யார் இந்த பிரேமலதா?

மதுரை மாவட்டம் இளமனூர் அருகே உள்ள கார்சேரியைச் சேர்ந்தவர் மாணவி பிரேமலதா. இவர் வரலாற்று பாடப்பிரிவில் இளங்கலை பயின்றார். அவரின் எதிர்கால இலக்கு சட்டம் பயில வேண்டும் என்பதே. அதற்காக முயன்று வருகிறார்.

இந்நிலையில்தான் அவருக்கு ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேச அழைப்பு வந்தது.
அதற்கான வித்து 2012-ல் இடப்பட்டது என்றே சொல்ல வேண்டும். ஆம், இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பிரேமலதா 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது 'ஏ பாத் டூ டிக்னிட்டி' (A Path to Dignity: The Power of Human Rights Education) என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது.

அதில் பிரேமலதா நடித்திருக்கிறார். அதில் அவர் மனித உரிமைகள் பற்றியும், பாலின பாகுபாடு, சாதிய பாகுபாடு ஏன் கூடாது என்பது குறித்தும் பேசியிருக்கிறார். அவரது பள்ளியில் அப்போது மனித உரிமைக் கல்வி ஒரு பாடப்பிரிவாகக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், மனித உரிமைகள் கல்வியின் அவசியம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.

தற்போது, 7 ஆண்டுகள் கழித்து பிரேமலதாவுக்கு இந்த ஆவணப்படத்தின் அடிப்படையில் ஐ.நா.வில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நடித்திருந்த அந்தப் படம் ஐ.நா.வில் திரையிடப்படுகிறது. திரையிடலின்போது பிரேமலதா உரையாற்றுகிறார்.

கடந்த சனிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்கள் பள்ளியில் நான் கற்ற மனித உரிமைக் கல்விதான் எனக்கு கேள்விக் கேட்கும் உரிமையை சொல்லிக்கொடுத்தது. அந்தக் கல்வியால்தான் மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு வந்துள்ளது" என்றார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் "இந்த வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நமது தேசத்தில் நிறைய சாதிகள் இருக்கின்றன. நமக்கு சாதிகள் தேவையில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐ.நா.வில் இதனை வலியுறுத்துவேன். எனக்கு சட்டம் பயிலவே விருப்பம். ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு பலமுறை மறுக்கப்பட்டது" எனக் கூறியுள்ளார்.

பிரேமலதாவுக்கு ஆரம்பத்திலிருந்து உதவியாக இருக்கும் பீப்பிள்ஸ் வாட்ச் என்.ஜி.ஓ.,வின் இயக்குநர் ஹென்ரி டிபானே கூறும்போது, "அரசாங்கம் பள்ளிகளில் மனித உரிமைகள் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x