Published : 01 Oct 2019 11:32 AM
Last Updated : 01 Oct 2019 11:32 AM

புதுச்சேரியில் பரவும் டெங்கு: அரசு மருத்துவமனையில் 6 பேர் அனுமதி; முதல்வருக்கு அக்கறை இல்லை என எம்எல்ஏ புகார்

தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் 6 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை தொடங்கும் நேரத்தில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசு கடிப்பதால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது புதுச்சேரியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இச்சூழலில் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் டெங்குவின் பாதிப்பும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நேற்று மட்டும் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மொத்தம் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனை தொடங்கி நகரின் முக்கிய மருத்துவமனைகளிலும் பலரும் காய்ச்சலுக்காக அதிக அளவில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். தற்போதைய புள்ளிவிவரப்படி 26 பேர் வரை டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் உள்சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு பரவி வருகிறது. குறிப்பாக உப்பளம் தொகுதிக்குட்பட்ட திருமூலர் நகர், அவ்வை நகர், உடையார் தோட்டம் ஆகிய பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் தங்களது பகுதிகளில் 24 மணிநேரமும் கொசுத் தொல்லை இருப்பதாகப் புகார் கூறினார்கள்.

சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீர்

உப்பளம் தொகுதியின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடையார் தோட்டம் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் உயர் சிகிச்சை கிடைக்காததால் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எம்எல்ஏ அன்பழகன் கூறினார்.

ஆய்வு செய்யும் எம்எல்ஏ அன்பழகன்

"மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளில் முதல்வர் நாராயணசாமிக்கு அக்கறை இல்லை. இடைத்தேர்தலே அவரது கவனமாகி விட்டது," என்றும் அன்பழகன் குற்றம் சாட்டினார்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x