Published : 01 Oct 2019 11:01 AM
Last Updated : 01 Oct 2019 11:01 AM

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி; லிட்டருக்கு 5 ரூபாயாவது குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ்

சென்னை

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு குறைந்தது 5 ரூபாயாவது குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.1) வெளியிட்ட அறிக்கையில், "சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. பெட்ரோல் விலை இன்று 14 காசுகளும், டீசல் விலை 11 காசுகளும் உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் ஏற்படும் மாற்றங்களால் பெட்ரோல், டீசல் விலை கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பெட்ரோல், டீசல் விலை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாத அளவில் தான் உள்ளன என்றாலும் கூட, கடந்த சில மாதங்களில் எரிபொருட்களின் விலை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகாமல் இருந்து வந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்து இருந்தனர். ஆனால், சவுதி அரேபியாவில் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 9 ஆம் தேதி வரை இறங்குமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை அதன்பின் ஏறுமுகத்தில் இருந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 10-ம் தேதி ரூ.74.51 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.77.50 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை 68.84 ரூபாயிலிருந்து ரூ.71.30 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 20 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.99 ரூபாயும், டீசல் விலை 2.46 ரூபாயும் உயர்ந்துள்ளன.

அதுமட்டுமின்றி கடந்த 20 நாட்களில் ஒரு நாள் கூட பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. அதேநேரத்தில் 16 நாட்கள் விலை உயர்ந்துள்ளன. 2019-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை இன்று உச்சத்தை அடைந்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.70.85 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.6.65 உயர்ந்து ரூ.77.50 என்ற உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல், டீசல் விலை 65.67 ரூபாயில் இருந்து ரூ.5.63 உயர்ந்து ரூ.71.30 என்ற அளவை அடைந்துள்ளது. மேலும், கடந்த 3 நாட்களாக விலை உயராமல் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை நேற்று முதல் மீண்டும் உயரத் தொடங்கி இருப்பதால், இனிவரும் நாட்களில் மேலும், மேலும் உயர்ந்து புதிய உச்சங்களை எட்டும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை அதிகரிக்கச் செய்துள்ளது. டீசல் விலை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரத் தொடங்கியிருப்பதால் மக்களின் துயரங்கள் சொல்ல முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு ரூ.19.98 வீதமும், டீசலுக்கு ரூ.15.83 வீதமும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து, அவற்றின் மீதான கலால் வரி 2017 அக்டோபரில் லிட்டருக்கு 2 ரூபாயும், 2018 அக்டோபரில் லிட்டருக்கு 1.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும். கடந்த 2008-09 காலத்தில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போது அதைச் சமாளிக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால், இப்போது பெருநிறுவனங்கள் மீதான வரி ரூ.1.50 லட்சம் கோடி அளவுக்கு குறைக்கப் பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரி ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. இது நியாயமல்ல.

எனவே, அடித்தட்டு மக்களின் சுமையை ஓரளவாவது கட்டுப்படுத்தும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு குறைந்தது 5 ரூபாயாவது குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x