Published : 01 Oct 2019 10:40 AM
Last Updated : 01 Oct 2019 10:40 AM

தலைக்கவசம் அணியாத 85 பேர் அரசு மருத்துவமனைக்கு சுற்றுலா: விபத்தில் காயம்பட்டவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு

இருசக்கர வாகன ஓட்டிகளை அரசு மருத்துவமனைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று, விபத்தின் போது தலைக்கவசம் இல்லாததால் காயமடைந்து சிகிச்சை பெறுபவரை பார்வையிடச் செய்த தருமபுரி டிஎஸ்பி ராஜகுமார் குழுவினர்.

தருமபுரி

தருமபுரியில் தலைக்கவசம் அணி யாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் 85 பேரை போலீஸார் அரசு மருத்துவமனைக்கு நேற்று சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைவது, உயிரிழப்பது ஆகியவற்றை தடுக்க தருமபுரி மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர் களை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பிடித்த போலீஸார் உறுதி மொழி எழுதித் தரச் செய்தனர். மேலும், அவர்களை சில மணி நேரங்கள் அமர வைத்து தலைக் கவச விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்பு எடுத்து அனுப்பினர்.

சில வாரங்களுக்கு பின்னர், மீண்டும் தருமபுரி நகரில் ஒருநாள் தீவிர சோதனை மேற்கொண்டு தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் சுமார் 100 பேரை பிடித்தனர். அவர்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றி தடங்கம் ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். அன்றைய நாள் முழுக்க நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிடச் செய்தனர். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்று வழக்குப் பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை குறித்து அவர்களுக்கு இந்த சுற்றுலாவின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அந்த வரிசையில், நேற்று தலைக்கவசம் இன்றி சென்ற 85 நபர்களை பிடித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். கடந்த 2 வாரங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 நபர்களை சந்திக்கச் செய்து அவர்கள் படும் சிரமங்கள் குறித்து போலீஸார் விளக்கம் அளித்தனர். அதேபோல, சிகிச்சையில் உள்ளவர்களின் சுய அனுபவத்தையும், கருத்தையும் 85 பேர் முன்னிலையில் போலீஸார் பகிரச் செய்தனர்.

இருசக்கர வாகன ஓட்டிகளை தலைக்கவசம் அணியச் செய்வதற்காக தருமபுரி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு வகையான நூதன முயற்சிகள் ஓரளவு பலனளிக்கத் தொடங்கியுள்ளன. சமீப காலமாக தருமபுரி நகரில் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளையும் தலைக்கவசம் அணியச் செய்யும்வரை இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x