Published : 28 Sep 2019 06:39 PM
Last Updated : 28 Sep 2019 06:39 PM

வைரலாகும் ‘ரேபீஸ்’ நோய் தாக்கிய சிறுவன் வீடியோ: 30 நிமிடத்திற்கு ஒருவர் மரணமடைவதாக அதிர்ச்சித் தகவல் 

மதுரை

கடந்த ஒரு வாரமாக ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ குரூப்களில் வைரலான ஒரு வீடியோவில், ரேபீஸ் தாக்கிய சிறுவன் ஒருவன், நாய் போன்று குரைப்பதும், நாக்கை தொங்கவிட்டு வடியும் உமிழ் நீரை நக்குவதுமாக பார்க்க பரிதாபமாக இருந்தது.

நோய்முற்றியதால் நாயின் செயல்பாடுகள் அந்த சிறுவனை தொற்றிக் கொண்டது. சிறுவன் மரணத்தின் தருவாயில் படும் துயரம் நெஞ்சை பதற வைக்கிறது.

வடமாநிலத்தில் ஏதோ ஊரில், மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது எடுத்த வீடியோதான், தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

உலக ரேபீஸ் தினம் வாரத்தில் இந்த வீடியோ வெளியான இந்த தருணத்தில் ரேபீஸ் நோயை பற்றியும், அந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பது பற்றியும் அறிவது அவசியம்.

‘ரேபிஸ்’வைரஸ் பாதிப்பைவருமுன்தடுக்க இதுவரைதடுப்புமருந்துகள்கண்டுபிடிக்கவில்லை. நாய் கடித்தவுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தப்பிக்க முடியும். ரேபீஸ் பாதித்த நாய்கள், வழக்கத்திற்கு மாறாக மிகுந்த ஆக்ரோஷமாகவும், நாக்கை தொங்க விட்டப்படியும், வாயிலிருந்து அதிகப்படியான உமிழ்நீர் வடிந்தபடியும் காணப்படும்.

செல்லமாக வளர்த்தவர்களைக் கூடத் தெரியாமல் கண்ணில் படும் மனிதர்களை எல்லாம் கடிக்கத் தொடங்கும்.

அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ் கூறுகையில், ‘‘ரேபீஸ் இறப்பிற்கும், தொற்று ஏற்படுவதற்கும் 96 சதவீதம் நாய் கடிப்பதே காரணமாகிறது. நாய்களைதவிர பூனை, ஓநாய், நரி, குரங்குகள் மற்றும் கீரிப்பிள்ளைகள் கடிப்பதின் மூலமாகவும் ரேபீஸ் பரவ வாய்ப்புள்ளது.

இந்தியாவில் 1,000 மனிதர்களில் 17.4 பேருக்கு நாய் கடி ஏற்படுகிறது. ஒவ்வொரு 2 வினாடிக்கும் ஒருவர் நாய்கடியால் பாதிக்கப்படுகிறார். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குள் ஒருவர் ரேபீஸ் மூலம் இற்கிறார். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் ரேபீஸ் நோயால் ஏற்படும் இறப்புகளில் இந்தியாவில் 36 சதவீதம்

நிகழ்கிறது.இந்தியாவில் ஏற்படும் நாய்கடிகளில் 40 சதவீதம் பேர் 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் ஆகும், ’’ என்றார்.

‘நாய்’ கடியில் இருந்து தப்புவது எப்படி?

கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர்(பொ) சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘முகத்தில் கடித்தால் 8 மணி நேரத்திற்குள்ளும், மற்றஇடங்களில் கடித்தால் 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள், தெரு நாய்களை தேவையற்ற வகையில் தொந்தரவு செய்யக்கூடாது. திடீரென்று அச்சம் ஏற்படுத்துதலும் கூடாது. குறிப்பாக நோயுற்று இருக்கும்போது, உணவு உண்ணும் தருணங்களில் இந்த செயல்களை செய்யக்கூடாது. அது அவைகளுக்கு கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தும்.

பயம் ஏற்பட்டால் நாய் தன்னுடைய வாலை பின் இரண்டு கால்களுக்கு இடையே வைத்துக் கொண்டு அதே இடத்தை விட்டு தப்பி ஓட முயற்சிக்கும். கோபத்துடன் காணப்பட்டால் பற்கள் வெளியே தெரியும்படி காணப்படும். நாய்க்கடி ஏற்பட்டால் விரைந்து செயல்படுதல் அவசியம். சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கடிப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் எந்த மாதிரியான நாய் எப்போது எந்த பகுதியில் கடித்தது என்று தெரிவிக்கும் வகையில் பெற்றோர் அவர்களை சொல்லி வளர்க்க வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x